Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 ஜூலை (ஹி.ச)
சமீப காலமாக சந்தையில் பச்சை, மஞ்சள், சிவப்பு, பிங்க் என பல்வேறு கவர்ச்சிகரமான நிறங்களில் அப்பளங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
குறிப்பாக குழந்தைகளை கவரும் வகையில் விற்கப்படும் இந்த குழல் அப்பளங்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக செயற்கை நிறமூட்டிகள் பயன்படுத்தப்படுவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
பலமுறை எச்சரிக்கை விடுத்தும் அதைப் பின்பற்றாமல் குழல் அப்பள தயாரிப்பாளர்கள் செயற்கை நிறமூட்டிகளை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.
இத்தகைய செயற்கை நிறமூட்டிகள் கலந்த அப்பளங்களை தொடர்ந்து உட்கொள்வதால் புற்றுநோய் உள்ளிட்ட கொடிய நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
செயற்கை நிறமூட்டிகள் கலந்த குழல் அப்பளம் தயாரித்தாலோ அல்லது கடைகளில் வைத்து விற்றாலோ அந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும், உணவு மாதிரி எடுத்து ஆய்வறிக்கையின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு சட்டத்தின் படி வழக்கு தொடரப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் பொதுமக்கள் இயற்கையான முறையில் உளுந்து, அரிசி உள்ளிட்ட தானியங்களால் தயாரிக்கப்படும் பாரம்பரிய அப்பளங்களை மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த கலர் அப்பளங்களை வாங்கிக் கொடுப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என உணவு பாதுகாப்புத் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b