கிரிப்டோ முதலீடு மோசடில் பழைய இரும்புக் கடை உரிமையாளர் கடத்தல் - 5 பேர் கைது
சென்னை, 16 ஜூலை (ஹி.ச) சென்னை திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த பழைய இரும்புக் கடை உரிமையாளர் ஒருவர், கடந்த சில மாதங்களாக தனக்கு தெரிந்தவர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் கிரிப்டோவில் முதலீடு செய்யுமாறு ஊக்குவித்து வந்துள்ளார். முதலீடு செய்த பண
Scrap metal shop owner abducted


சென்னை, 16 ஜூலை (ஹி.ச)

சென்னை திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த பழைய இரும்புக் கடை உரிமையாளர் ஒருவர், கடந்த சில மாதங்களாக தனக்கு தெரிந்தவர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் கிரிப்டோவில் முதலீடு செய்யுமாறு ஊக்குவித்து வந்துள்ளார்.

முதலீடு செய்த பணத்திற்கு இரண்டு மடங்கு லாபம் தருவதாகக் கூறி பல லட்சம் ரூபாய் வரை வசூலித்ததாகத் தெரிகிறது. ஆனால் சொன்னபடி லாபப் பணத்தையோ, அசல் பணத்தையோ திருப்பித் தராமல் அவர் ஏமாற்றி வந்ததாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்ட நபர்களில் சிலர், ஒன்று சேர்ந்து அந்த பழைய இரும்புக் கடை உரிமையாளரை வழிமறித்து காரில் கடத்திச் சென்றுள்ளனர். பணத்தை திருப்பித் தருமாறு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்த உரிமையாளரின் குடும்பத்தினர் திருவேற்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி, பழைய இரும்புக் கடை உரிமையாளரை பத்திரமாக மீட்டனர். மேலும் அவரை கடத்திய 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் கிரிப்டோ முதலீட்டு மோசடி குறித்தும், கடத்தல் சம்பவம் குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b