Enter your Email Address to subscribe to our newsletters

மயிலாடுதுறை, 16 ஜூலை (ஹி.ச.)
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா மேமாத்தூர் கிராமத்தில் தாய் சக்தி ஏஜென்சி என்ற பெயரில் பெட்ரோல் பங்க் உள்ளது.
இங்கு கடந்த 14ம் தேதி மேமாத்தூர் புது தெருவை சேர்ந்த பொன்மணி என்ற பெண் ஊழியர் பணியில் இருந்த போது மதபோதையில் வந்த ஆறு பேர் அடங்கிய கும்பல் ஒன்று 2 இருசக்கர வாகனங்களில் பெட்ரோல் போட்டுள்ளனர்.
இரண்டு வாகனங்களிலும் 350 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுவிட்டு பணம் தராமல் அங்கு பேசிக் கொண்டிருந்த நிலையில் பொன்மணி பெட்ரோல் போட்டதற்கான பணத்தை கேட்டுள்ளார்.
தருகிறேன் என்று கூறியவர்கள் பணத்தை கொடுக்காமல் சென்றபோது பொன்மணி அவர்களை கூப்பிட்டு நிறுத்தி பணத்தை கொடுத்து விட்டு செல்லுங்கள் என்று கூறியதால் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பங்கின் மேலாளர் வினோத்குமார் வந்து பேசியுள்ளார்.
அப்போது வினோத்குமாரையும் தாக்கி விட்டு பெண்ணென்று பாராமல் தன்னையும் தாக்கியதாகவும் அப்போது அங்கு வந்த தனது கணவர் மோகன்ராஜையும் தாக்கியுள்ளனர் என்று கூறிய பொன்மணி உள் காயங்களுடன் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட செம்பனார்கோவில் போலீசார் பரசலூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெகதீசன் (21), திருமூர்த்தி (19), மேலப்பாதியை சேர்ந்த லிங்கராஜ் (19) மற்றும் 17 வயதுடைய சிறுவர்களான ஆதிஷ், சஞ்சய் ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களை திருச்சம்பள்ளியில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் நீதிபதி ஜெகதீசன் என்பவரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டும் திருமூர்த்தி, லிங்கராஜ் ஆகிய இருவரை நீதிமன்ற பினையிலும் விடுவித்தார்.
மேலும் 17 வயதுடைய சிறுவர்கள் இருவரையும் மயிலாடுதுறையில் உள்ள இளம்சிறார் நீதிக்குழுமத்தில் இன்று (16.7.2026) காலை ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு பெற்றோர்களுடன் அனுப்பி வைத்தார்.
மேலும் இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள ஹரிஹரசுதன் என்பவரை செம்பனார்கோவில் போலீசார் தேடி வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN