Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 ஜூலை (ஹி.ச.)
தமிழகத்தில் கோயில் சொத்துகள் மற்றும் பொதுச் சொத்துகளை அபகரிக்கும் முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் தமிழக அரசை தேசிய முற்போக்கு திராவிட கழகப் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சென்னை, மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவரும், தவெக நிர்வாகியுமான வீராசாமி மீது தொடரப்பட்டுள்ள ஊழல் வழக்கில், குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருப்பதை தேமுதிக வரவேற்கிறது.
ஊழல் மற்றும் லஞ்சத்திற்கு எதிராக சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படையில், எந்தவித பாரபட்சமும் இன்றி உரிய சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட வேண்டும். ஊழல் செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்பதே தேமுதிகவின் நிலைப்பாடாகும்.
அதேபோல், பழனி தண்டபாணி சுவாமி மடத்திற்கு சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கர் நிலம், போலி ஆவணங்கள் மூலம் தனிநபர்களின் பெயரில் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.
கோயில் நிர்வாகத்தின் புகாரின் அடிப்படையில் சார்-பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதையும், இந்த முறைகேடு தொடர்பாக நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை சிபிசிஐடி (CBCID) வசம் மாற்றப்பட்டுள்ளது.
ஆனால், ரூ.100 கோடி மதிப்புள்ள கோயில் சொத்து வெறும் ரூ.2 கோடிக்கு பதிவு செய்யப்பட்டதாக கூறப்படும் இந்த மிகப்பெரிய முறைகேடு எவ்வாறு நடைபெற்றது, இதன் பின்னணியில் யார் யார் செயல்பட்டனர், எந்த அதிகாரிகள் அல்லது இடைத்தரகர்கள் இதற்கு உடந்தையாக இருந்தனர் என்பன குறித்து முழுமையான, வெளிப்படையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.
இந்த முறைகேட்டில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் அதிகாரிகளாக இருந்தாலும், தனிநபர்களாக இருந்தாலும், அரசியல் செல்வாக்கு மிக்கவர்களாக இருந்தாலும், எந்தவித தயக்கமும் இன்றி அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்து, நீதிமன்றத்தின் மூலம் உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும். மேலும், முறைகேடாக பதிவு செய்யப்பட்டுள்ள அந்த நிலத்தை உடனடியாக மீட்டு, மீண்டும் பழனி தண்டபாணி சுவாமி மடத்தின் வசம் ஒப்படைக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் கோயில் சொத்துகள் மற்றும் பொதுச் சொத்துகளை அபகரிக்கும் முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், இதுபோன்ற முறைகேடுகள் இனி நடைபெறாத வகையில் பதிவு மற்றும் வருவாய்த் துறைகளில் கூடுதல் கண்காணிப்பு மற்றும் சீர்திருத்தங்களை செயல்படுத்த வேண்டும் என தேமுதிக சார்பாக வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b