மன்னார்குடி அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் மகளிர் கல்லூரி கட்டிடம் கட்ட எதிர்ப்பு - மாணவர்கள் போராட்டம்
திருவாரூர், 16 ஜூலை (ஹி.ச) திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் பல ஆண்டுகளாக மாணவர்களின் உடற்கல்வி மற்றும் விளையாட்டு தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்த ஒரே விளையாட்டு மைதானத்தை அழித்து, அங்கு மகளிர் கல்லூரிக்கான புதிய
மன்னார்குடி அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் மகளிர் கல்லூரி கட்டிடம் கட்ட எதிர்ப்பு - மாணவர்கள் போராட்டம்


திருவாரூர், 16 ஜூலை (ஹி.ச)

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் பல ஆண்டுகளாக மாணவர்களின் உடற்கல்வி மற்றும் விளையாட்டு தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்த ஒரே விளையாட்டு மைதானத்தை அழித்து, அங்கு மகளிர் கல்லூரிக்கான புதிய கட்டிடம் கட்ட உயர்கல்வித் துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இன்று திரண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்லூரியின் நுழைவாயில் மற்றும் மைதானப் பகுதியில் திரண்ட மாணவ-மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

விளையாட்டு மைதானம் அழிக்கப்பட்டால் தங்களின் விளையாட்டு எதிர்காலம் பாதிக்கப்படும் என்றும், உடற்கல்வி பயிற்சிக்கு இடமில்லாமல் போய்விடும் என்றும் மாணவர்கள் வேதனை தெரிவித்தனர்.

மகளிர் கல்லூரி கட்டுவதற்கு எதிர்ப்பு இல்லை என்றாலும், விளையாட்டு மைதானத்தை தவிர்த்து மாற்று இடத்தில் கட்டிடத்தை கட்ட வேண்டும் என்பதே தங்களது கோரிக்கை என அவர்கள் தெரிவித்தனர். மாணவர்களின் இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

விளையாட்டு மைதானத்தை பாதுகாக்கக் கோரியும், உயர் கல்வித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதில் தலையிட்டு மாற்று நடவடிக்கை எடுக்கக் கோரியும் அதிகாரிகளுக்கு மாணவர்கள் தரப்பில் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.

Hindusthan Samachar / vidya.b