Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 16 ஜூலை (ஹி.ச)
தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளை அமைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் ஆர். மகாதேவன் அடங்கிய அமர்வு முன்பு இன்று நடைபெற்றது.
அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், நவோதயா பள்ளிகளில் இந்தி, ஆங்கிலம், வட்டார மொழி என மும்மொழிக் கொள்கை பின்பற்றப்படுகிறது, ஆனால் தமிழகம் 2006-ம் ஆண்டு தமிழ் கற்றல் சட்டத்தின்படி இருமொழிக் கொள்கையை மட்டுமே பின்பற்றுகிறது என்று வாதிட்டார்.
இதற்கு பதிலளித்த நீதிபதி நாகரத்னா, இதை மொழிப் பிரச்சினையாக மாற்ற வேண்டாம் என்றும், நாம் ஒரு கூட்டாட்சி சமூகத்தில் வாழ்கிறோம் என்றும் குறிப்பிட்டார்.
கிராமப்புற ஏழை மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு இந்த உத்தரவை பிறப்பிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் எனது மாநிலம், எனது மாநிலம் என்ற மனப்பான்மையை தவிர்க்க வேண்டும் என்றும், மாநில அரசு ஒன்றிய அரசுடன் கலந்தாலோசித்து, தேவைப்பட்டால் இருமொழிக் கொள்கை தொடர்வதற்கான நிபந்தனைகளை முன்வைக்கலாம் என்றும் அவர் யோசனை தெரிவித்தார்.
இதேவேளையில், சிபிஎஸ்இ பள்ளிகளில் வரும் ஜூலை 1 முதல் 9-ம் வகுப்புக்கு மும்மொழிக் கொள்கையை கட்டாயமாக்கிய சுற்றறிக்கைக்கு எதிரான மனுக்களையும் உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
அதில் குறைந்தது இரண்டு இந்திய பூர்வீக மொழிகள் கட்டாயம் என்ற விதி, புத்தகங்கள் மற்றும் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலையில் மாணவர்களுக்கு அதிக சுமையை ஏற்படுத்தும் என்று மனுதாரர்கள் வாதிட்டுள்ளனர்.
இதனைக் கருத்தில் கொண்டு, ஒன்பதாம் வகுப்பில் மும்மொழித் திட்டத்தை அமல்படுத்துவதில் அவசரம் காட்ட வேண்டாம் என நீதிபதி வலியுறுத்தியதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Hindusthan Samachar / vidya.b