Enter your Email Address to subscribe to our newsletters

ஹைதராபாத் , 16 ஜூலை (ஹி.ச.)
தெலங்கானா மாநிலத்தின் பாரம்பரிய விழாவான ஆஷாட போனாலு திருவிழா, கிரேட்டர் ஹைதராபாத் மாநகராட்சி (ஜி.எச்.எம்.சி.) பகுதிகளில் கோலாகலமாக தொடங்கியது.
இந்த திருவிழாவிற்கு ஆயிரக்கணக்கான கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
தெலங்கானா கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தின் அடையாளமாக விளங்கும் இந்த திருவிழாவையொட்டி, முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, மாநில மக்களுக்கும் பக்தர்களுக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் தனது அறிக்கையில் கூறியதாவது :
போனாலு திருவிழா சமூக ஒற்றுமையின் அடையாளமாக திகழ்கிறது என்று தெரிவித்த அவர், பக்தர்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
விழா சிறப்பாக நடைபெறுவதற்காக மாநில அரசு ரூ.20 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையடுத்து, கோவில் வளாகங்களில் தூய்மை பணிகள், குடிநீர் வசதி, தடையில்லா மின்சாரம், மருத்துவ சேவைகள் மற்றும் போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மகாகாளி அம்மனுக்கு அர்ப்பணிக்கப்படும் இந்த ஆஷாட போனாலு திருவிழா, தேவதாயத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்களில் விமரிசையாக நடைபெற உள்ளது.
ஆகஸ்ட் மாதத்தின் நடுப்பகுதி வரை நடைபெறும் இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பக்தர்கள் அமைதியாகவும், பக்தி உணர்வுடனும் விழாவில் கலந்து கொண்டு அம்மனின் அருளைப் பெற வேண்டும் என்று முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி கேட்டுக்கொண்டார்.
பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் வசதிகளை உறுதி செய்ய பல்வேறு அரசு துறைகள் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகின்றன.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA