Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 ஜூலை (ஹி.ச.)
சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் (ECR) திருவான்மியூரில் இருந்து உத்தண்டி வரை அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்த உயர்மட்ட மேம்பாலச் சாலைத் திட்டத்தை ரத்து செய்ய தமிழக அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆட்சிக் காலத்தில் 13.3 கிலோமீட்டர் நீளத்தில் இந்த உயர்மட்ட மேம்பாலத் திட்டத்திற்கான ஒப்பந்தம் கோரப்பட்டு, ரூ.2,100 கோடி மதிப்பீட்டில் தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்தது.
ஆனால், ஒப்பந்தம் வழங்கப்பட்டதில் முறைகேடுகள் நடந்ததாக புதிய அரசு குற்றச்சாட்டு எழுப்பியதுடன், அந்த ஒப்பந்தத்தை முழுமையாக ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் முதலமைச்சர், சென்னையில் உயர்மட்ட மேம்பாலத் திட்டங்களில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் திருவான்மியூர்–உத்தண்டி உயர்மட்ட மேம்பாலத் திட்டத்தை ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அரசு விரைவில் விளக்கம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / GOKILA arumugam