Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 16 ஜூலை (ஹி.ச.)
தொண்டி அருகே இரவலாக வாகனம் தர மறுத்ததற்காக தன் மீது பொய் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்த காவல்துறையினரிடம் இருந்து ரூபாய் 20 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரி தொண்டியைச் சேர்ந்த பீட்டர் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இவர் தாக்கல் செய்த மனுவில், தொண்டி பகுதியில் தன்னிடம் காவல்துறையினர் இரவலாக வாகனம் கேட்டதாகவும், அதனை தர மறுத்ததால் ஆத்திரமடைந்த அவர்கள், தன் மீது பொய்யான குற்ற வழக்கைப் பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த பொய் வழக்கு காரணமாக தான் கடும் மன உளைச்சலுக்கும், சமூகத்தில் அவப்பெயருக்கும் ஆளானதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி வழங்கும் வகையில், பொய் வழக்கு போட்டு தன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய காவல்துறையினர் ரூபாய் 20 லட்சம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று அவர் தனது மனுவில் கோரியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக காவல்துறை தலைமை இயக்குநர், அப்போது தொண்டியில் துணைக் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய புகழேந்தி உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b