கீழடியில் ஒரே அகழாய்வுக் குழியில் மூன்று வித வடிகால் அமைப்புகள் கண்டுபிடிப்பு
சிவகங்கை, 16 ஜூலை (ஹி.ச.) சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் கடந்த மார்ச் மாதம் தொடங்கிய பதினோராம் கட்ட அகழாய்வில், இதுவரை 9 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இதில் ஒரு குழியில் சுமார் 2 மீட்டர் ஆழத்தில் செங்கல் கட்டுமானமும், அதன் அ
கீழடியில் ஒரே அகழாய்வுக் குழியில் மூன்று வித வடிகால் அமைப்புகள் கண்டுபிடிப்பு


சிவகங்கை, 16 ஜூலை (ஹி.ச.)

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் கடந்த மார்ச் மாதம் தொடங்கிய பதினோராம் கட்ட அகழாய்வில், இதுவரை 9 குழிகள் தோண்டப்பட்டுள்ளன.

இதில் ஒரு குழியில் சுமார் 2 மீட்டர் ஆழத்தில் செங்கல் கட்டுமானமும், அதன் அருகே மூன்றரை மீட்டர் நீளமுடைய வடிகால் அமைப்பும் வெளிப்பட்டுள்ளது.

திரவப் பொருட்கள் வெளியேறும் வகையில் வெறும் 10 சென்டிமீட்டர் அகலத்தில் இந்த வடிகால் நுணுக்கமாக அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதே குழியில் சுடுமண்ணால் ஆன உருளை வடிவ குழாய்கள் பொருத்திய வடிகால், செங்கல்லால் கட்டப்பட்ட மூடிய வடிகால் மற்றும் திறந்தவெளி வடிகால் என மூன்று விதமான வடிகால் தொழில்நுட்பங்களும் ஒருங்கே கண்டறியப்பட்டுள்ளன.

ஏற்கெனவே கீழடியில் திறந்தவெளி வடிகால், செங்கல் மூடிய வடிகால், சுருள் வடிவ குழாய்கள், உறை கிணறுகள் போன்றவை பண்டையத் தமிழர்களின் நீர் மேலாண்மைக்கு சான்றாக கிடைத்து வந்த நிலையில், தற்போது ஒரே இடத்தில் மூன்று அமைப்புகள் கிடைத்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த வடிகால் அமைப்புகளுடன், பண்டைய கால உறை கிணறு, கைப்பிடியுடன் கூடிய சிவப்பு நிற பானை, முழுமையான சுடுமண் தட்டு மற்றும் செங்கல் கட்டுமான எச்சங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் கழிவுநீரை வெளியேற்றுவதிலும், குடிநீரை பாதுகாப்பாக பயன்படுத்துவதிலும் எவ்வளவு தேர்ந்தவர்களாக இருந்தனர் என்பதற்கு இந்த கண்டுபிடிப்புகள் மீண்டும் ஒரு வலுவான சான்றாக அமைந்துள்ளன.

Hindusthan Samachar / vidya.b