Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 16 ஜூலை (ஹி.ச)
பொதுமக்களுக்கு கூடுதல் சுமை ஏற்படாத வகையில், அரசு பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்தாமல் போக்குவரத்துத் துறையின் வருவாயை அதிகரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொதுமக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து வரும் முதலமைச்சர், போக்குவரத்துக் கழகங்களின் நிதிநிலையை மேம்படுத்தும் நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டில் 2,000 புதிய குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகளை விரைவாக கொள்முதல் செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புதிய ஏசி பேருந்துகள் சேவைக்கு வந்தாலும், அதன் பெயரில் பயணிகளின் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்பதில் முதலமைச்சர் உறுதியாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, கட்டண உயர்வு இல்லாமல் போக்குவரத்துத் துறையின் வருவாயை அதிகரிக்க மாற்று வழிகளை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
குறிப்பாக, பேருந்துகளின் வெளிப்புறம் மற்றும் உட்புறங்களில் வணிக விளம்பரங்கள் இடம்பெறச் செய்தல், பயணச் சீட்டுகளில் (டிக்கெட்டுகளில்) தனியார் நிறுவனங்களின் விளம்பரங்களை அச்சிடுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே சில மாநிலங்களில் பேருந்து பயணச் சீட்டுகளில் தனியார் விளம்பரங்களை வெளியிட்டு அரசுக்கு கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டு வரும் நிலையில், அதே நடைமுறையை தமிழ்நாட்டிலும் செயல்படுத்தும் திட்டத்தை போக்குவரத்துத் துறை பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நடவடிக்கைகள் மூலம் பயணிகளுக்கு கட்டணச் சுமை ஏற்படுத்தாமல், போக்குவரத்துக் கழகங்களின் வருவாயை உயர்த்த அரசு திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / P YUVARAJ