Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 ஜூலை (ஹி.ச.)
தமிழ்நாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSME) துறையின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில், நீண்டகால செயல் திட்டத்தை உருவாக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதற்காக தொழில்துறை ஆலோசகர்களை தேர்வு செய்வதற்கான டெண்டரை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசின் MSME துறையின் கீழ் செயல்படும் FaMeTN (Facilitating MSMEs of Tamil Nadu) அமைப்பு, பல்வேறு தொழில்துறைகளின் தற்போதைய நிலையை ஆய்வு செய்து, எதிர்கால வளர்ச்சிக்கான விரிவான செயல்திட்டத்தை உருவாக்க ஆலோசனை நிறுவனங்களை நியமிக்க ஒப்பந்தம் கோரியுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், உணவு பதப்படுத்துதல், மின்னணு உற்பத்தி, தோல் தொழில், ஜவுளித் துறை, ஆட்டோமொபைல், மின்சார வாகனங்கள் (EV), புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட முக்கிய தொழில்துறைகள் விரிவாக ஆய்வு செய்யப்பட உள்ளன.
ஒவ்வொரு துறையின் தற்போதைய சவால்கள், வளர்ச்சி வாய்ப்புகள் மற்றும் உலகளாவிய போட்டித்திறனை அதிகரிக்கும் வழிமுறைகள் குறித்து பரிந்துரைகள் வழங்கப்படும்.
இந்த செயல் திட்டத்தின் முக்கிய நோக்கங்களாக தொழில்துறைகளின் உற்பத்தித் திறனை உயர்த்துதல், தொழிலாளர்களின் திறன் மேம்பாடு, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், ஆராய்ச்சி மற்றும் புதுமைகளை ஊக்குவித்தல், டிஜிட்டல் தொழில்நுட்ப பயன்பாட்டை விரிவுபடுத்துதல், ஏற்றுமதியை அதிகரித்தல் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில் வளர்ச்சியை ஊக்குவித்தல் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த நீண்டகால வளர்ச்சி திட்டத்தின் மூலம், தமிழ்நாட்டின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை உலகளாவிய போட்டிக்குத் தயார்படுத்துவதோடு, மாநிலத்தில் முதலீடுகளை ஈர்த்தல், வேலைவாய்ப்புகளை அதிகரித்தல் மற்றும் தொழில்துறை வளர்ச்சியை மேலும் வலுப்படுத்துவதே அரசின் இலக்காக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P