Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 ஜூலை (ஹி.ச.)
தமிழகத்தில் தினமும் பல்வேறு இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரித்து வருகிறது. இன்று வேலூர், மதுரை, சேலம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 19 மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் கோடை வெயில் முடிவடைந்தும் வெயிலின் தாக்கம் கொஞ்சம் கூட குறையாமல் பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. தினமும் பல்வேறு இடங்களில் 100 டிகிரியை தாண்டி சுட்டெரித்து வருகிறது. நேற்று 12 மாவட்டங்களில் வெயில் சதம் அடித்துள்ளது.
அதிகபட்சமாக வேலூரில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகி இருந்தது. அதேபோல் மதுரை விமான நிலையம்-106, மதுரை நகரம்-105, சென்னை மீனம்பாக்கம், திருத்தணியில் தலா 104, நுங்கம்பாக்கம், பாளையங்கோட்டை, சென்னை நுங்கம்பாக்கம், திருச்சி, தஞ்சை, கரூர், பரமத்தி வேலூர், நாகை, ஈரோடு 100 டிகிரிக்கு மேல் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று வேலூர், மதுரை, சேலம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 19 மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவித்துள்ளது.
அதேபோல் நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வடக்கு கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN