Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 ஜூலை (ஹி.ச.)
தமிழகத்தில் எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்ததாக கூறப்படும் 'குதிரை பேரம்' குற்றச்சாட்டுகள் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
வழக்கறிஞர் ஜெ. பாலசுப்பிரமணி தாக்கல் செய்த பொதுநல மனு, நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவில், ஊத்தங்கரை தவெக எம்.எல்.ஏ. இளையராஜா அளித்த புகாரின் அடிப்படையில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றும், அதுமட்டுமின்றி குதிரை பேரம் தொடர்பாக பிற எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்தும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.
விசாரணையின்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,
குதிரை பேரம் நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் கண்களை மூடிக்கொண்டு இருக்க முடியாது. இந்த விவகாரத்தில் முழுமையான உண்மையை வெளிக்கொணர சுயாதீன அமைப்பான சிபிஐ விசாரணை அவசியம் என்று வாதிட்டார்.
மேலும், தவெக எம்.எல்.ஏ. ஒருவர் தன்னிடம் குதிரை பேரத்திற்காக பேசியதாக கூறிய குற்றச்சாட்டு நம்பும்படியாக இல்லை.
அதேபோல், அந்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையும் நம்பகத்தன்மை இல்லாததாக உள்ளது. சபாநாயகர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த குற்றச்சாட்டுகள் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்றன என்றும் தெரிவித்தார்.
அத்துடன், குதிரை பேரம் தொடர்பாக தவெக சார்பில் அளிக்கப்பட்ட ஐந்து புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குறிப்பிட்ட ஒரு புகாரின் மீது மட்டும் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
அனைத்து புகார்களும் ஒரே மாதிரியான அணுகுமுறையில் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் வாதிட்டார்.
இதற்கு நீதிபதிகள், ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல்துறை விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அதை சிபிஐக்கு மாற்ற வேண்டிய அவசியம் என்ன? மற்ற புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதற்காக மட்டும் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற முடியுமா? என்று கேள்வி எழுப்பினர்.
தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உண்மையை கண்டறியும் நோக்கில் தமிழ்நாடு காவல்துறை சட்டப்படி விசாரணை மேற்கொண்டு வருகிறது. தற்போதைய சூழலில் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள், வழக்கு தொடர்பான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P