Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 16 ஜூலை (ஹி.ச.)
மதுரை மாவட்டம் கள்ளந்திரி பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஒட்டப்பட்டிருந்த கட்சித் தலைவர் திருமாவளவனின் போஸ்டர் மீது மர்ம நபர்கள் சாணி (கழிவு) வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், இது திட்டமிட்டு செய்யப்பட்ட அவமதிப்பு செயல் என குற்றம்சாட்டி, அப்பன்திருப்பதி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும், ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் காவல் நிலையத்தில் குவிந்ததால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், இரண்டு சிறுவர்கள் போஸ்டர் மீது கழிவு வீசியதாக தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இருப்பினும், இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த விசிகவினர், சம்பவத்தின் பின்னணியில் வேறு நபர்கள் இருக்கக்கூடும் என்றும், உண்மையான குற்றவாளிகளை அடையாளம் கண்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இதுதொடர்பாக காவல்துறையினருடன் விசிக நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தியதுடன், சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN