Enter your Email Address to subscribe to our newsletters

வேலூர், 16 ஜூலை (ஹி.ச.)
வேலூர் மாவட்டத்தில் உள்ள விஐடி (VIT) பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் படிப்பில் சேர்க்கை பெற்று தருவதாகக் கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
விஐடி பல்கலைக்கழக பதிவாளர் (ரிஜிஸ்ட்ரார்) பிரம்மபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், தேனி மாவட்டம் வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்த சார்லஸின் மகன் சஜு (45), பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் சீட் பெற்றுத் தருவதாக கூறி பலரிடம் பணம் வசூலித்தது தெரியவந்தது.
இதையடுத்து, சஜுவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அவரிடமிருந்து கணக்கில் வராத ரூ.15 லட்சம் ரொக்கம், 12 செல்போன்கள் மற்றும் 2 லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இதேபோல் வேறு யாரிடமாவது பணம் பெற்று மோசடி செய்துள்ளாரா, இந்த சம்பவத்தில் மேலும் யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சஜு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Hindusthan Samachar / ANANDHAN