Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 ஜூலை (ஹி.ச.)
அதிமுக முன்னாள் அமைச்சர்களும், முன்னாள் எம்.எல்.ஏ.க்களுமான சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்ட உத்தரவை ரத்து செய்யக் கோரி அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த மனுக்களுக்கு பதிலளிக்குமாறு சட்டமன்ற செயலாளர் உள்ளிட்டோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் விராலிமலை மற்றும் கரூர் தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏ.க்களான சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர், தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்து, தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க.) இணைந்தனர்.
அவர்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்ட உத்தரவை ரத்து செய்யக் கோரி அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்துள்ளார்.
மனுக்களில், இரு உறுப்பினர்களுக்கு எதிராக தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருந்தபோதும், அவர்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டது சட்டவிரோதமானது எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், உரிய பரிசீலனை இன்றி இயந்திரத்தனமாக முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், சபாநாயகரின் நடவடிக்கை அரசியல் சாசனத்திற்கும் இயற்கை நீதி கோட்பாடுகளுக்கும் முரணானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்குகளில் இறுதி தீர்ப்பு வரும் வரை விராலிமலை மற்றும் கரூர் தொகுதிகள் காலியாக உள்ளதாக அறிவித்து மேற்கொள்ளப்படும் அடுத்தடுத்த நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதிக்கவும் மனுக்களில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வு, சட்டமன்ற செயலாளர், சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டது.
மேலும், ஏற்கனவே நான்கு எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்றதை எதிர்த்து நிலுவையில் உள்ள வழக்குகளுடன், இந்த இரு மனுக்களையும் இணைத்து விசாரணைக்கு பட்டியலிடவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam