காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை தினமும் பின்தொடர்ந்து துன்புறுத்தல் - இளைஞர் அதிரடி கைது
திருநெல்வேலி, 16 ஜூலை (ஹி.ச) திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த செல்வமணிகண்டன் ( வயது 25 ) அதே பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வரும் மாணவியை சில மாதங்களாக ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். தனது காதலை மாணவியிடம் வெளிப்படுத்திய அவர், தன்னை
காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை தினமும் பின்தொடர்ந்து துன்புறுத்தல் - 25 வயது இளைஞர் அதிரடி கைது


திருநெல்வேலி, 16 ஜூலை (ஹி.ச)

திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த செல்வமணிகண்டன்

( வயது 25 ) அதே பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வரும் மாணவியை சில மாதங்களாக ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

தனது காதலை மாணவியிடம் வெளிப்படுத்திய அவர், தன்னை காதலிக்கும்படி தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாக தெரிகிறது.

ஆனால் அதற்கு மாணவி கடும் எதிர்ப்பு தெரிவித்து மறுத்துவிட்டார்.

இதனை ஏற்றுக்கொள்ளாத செல்வமணிகண்டன், மாணவி கல்லூரிக்கு சென்று வரும் வழியில் தினமும் பின்தொடர்ந்து சென்றும், செல்போன் மூலம் தொடர்பு கொண்டும் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதனால் மாணவி கல்லூரிக்கு செல்ல முடியாமல் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். தனது படிப்பும் பாதிக்கப்படுவதை உணர்ந்த மாணவி, நடந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பெற்றோருடன் காவல் நிலையத்திற்கு சென்ற மாணவி, செல்வமணிகண்டன் மீது புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த செல்வமணிகண்டனை தீவிரமாக தேடி வந்தனர்.

திருநெல்வேலி சந்திப்பு காவல்துறையினர் மணிகண்டன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவசரக் கைது நடவடிக்கை மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணைக்கு பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளார்.

பெண்களுக்கு எதிரான இது போன்ற பின்தொடர்தல் மற்றும் அச்சுறுத்தல் புகார்களுக்குத் தமிழக காவல்துறையின் '181' (பெண்கள் உதவி எண்) அல்லது '1091' ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு உடனடியாகப் புகார் அளிக்கலாம் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b