ஈரோடு அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி கிராம மக்கள் காலவரையற்ற உண்ணாவிரதம்
ஈரோடு, 16 ஜூலை (ஹி.ச.) ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடி பேருந்து நிலையம் அருகில், குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் டாஸ்மாக் கடை ஒன்று இயங்கி வருகிறது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல், பொது அமைதிக்கு பங்கம், பெ
ஈரோடு அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி கிராம மக்கள் காலவரையற்ற உண்ணாவிரதம்


ஈரோடு, 16 ஜூலை (ஹி.ச.)

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடி பேருந்து நிலையம் அருகில், குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் டாஸ்மாக் கடை ஒன்று இயங்கி வருகிறது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல், பொது அமைதிக்கு பங்கம், பெண்களுக்கு பாதுகாப்பின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும், இரவு நேரங்களில் குடிபோதையில் ஏற்படும் தகராறுகளால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இந்த டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி ஏற்கனவே பலமுறை மாவட்ட நிர்வாகத்திடமும், வட்டாட்சியரிடமும் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து தங்களது எதிர்ப்பை வலுவாக பதிவு செய்யும் வகையில் கவுந்தப்பாடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து இன்று உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள், சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்றவோ அல்லது முற்றிலுமாக மூடவோ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த போராட்டத்தினால் கவுந்தப்பாடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b