தமிழகத்தில் 50 குறுகிய கால ஒப்பந்தங்கள் ரத்து - தமிழக அரசு அதிரடி
சென்னை, 17 ஜூலை (ஹி.ச.) தமிழக அரசின் நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் பல்வேறு பணிகளுக்காக குறுகிய கால ஒப்பந்தங்களுக்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டிருந்தது. பொதுவாக டெண்டர் கோரப்பட்டு விண்ணப்பிக்க போதிய கால அவகாசம் வழங்கப்பட வேண்டும
தமிழகத்தில் 50 குறுகிய கால ஒப்பந்தங்கள் ரத்து - தமிழக அரசு அதிரடி


சென்னை, 17 ஜூலை (ஹி.ச.)

தமிழக அரசின் நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் பல்வேறு பணிகளுக்காக குறுகிய கால ஒப்பந்தங்களுக்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டிருந்தது.

பொதுவாக டெண்டர் கோரப்பட்டு விண்ணப்பிக்க போதிய கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். ஆனால், குறிப்பிட்ட ஒப்பந்தப்புள்ளிகளைச் சமர்ப்பிக்க 1 முதல் 4 நாட்கள் மட்டுமே மிகக் குறுகிய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது

குறிப்பிட்ட சில ஒப்பந்ததாரர்களுக்குச் சாதகமாக, விதிகளை மீறி இந்த டெண்டர்கள் ஒதுக்கீடு செய்யப்பட முயன்றதாகப் புகார்கள் எழுந்தன.

இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் வெளியிடப்பட்ட 50 குறுகிய கால ஒப்பந்தங்கள் தற்போது அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து, இந்த குறுகிய கால ஒப்பந்தங்களை வெளியிட்ட பொறியாளரிடம் விளக்கம் கேட்டு துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அவரிடம் இருந்து பெறப்பட்ட விளக்கத்தை பரிசீலித்த நிர்வாகம், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியிடப்பட்ட அனைத்து 50 குறுகிய கால ஒப்பந்தங்களையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

கழிவுநீர் வடிகால் பராமரிப்புப் பணிகள், புதிய குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகள்,புதிய ஆழ்துளைக் கிணறுகள் (Borewell) அமைக்கும் பணிகள்,வாரச்சந்தை கடைகள் ஏலம் மற்றும் பராமரிப்பு உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்ட 50 டெண்டர்களில் அடங்கும்.

மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு நகராட்சிகளில் இந்த ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. உடுமலைப்பேட்டை நகராட்சியில் (திருப்பூர் மாவட்டம்): அதிகபட்சமாக இங்கு மட்டும் 30 டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கோத்தகிரி நகராட்சியில் 3 டெண்டர்கள் செங்கம் நகராட்சியில் 2 டெண்டர்கள் என பெரம்பலூர், திருவள்ளூர், மணப்பாறை, திருவையாறு உள்ளிட்ட பல்வேறு நகராட்சிகளில் 20-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த ரத்து நடவடிக்கை நகராட்சி நிர்வாகத் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b