கொள்முதல் நிலையங்களில் தேங்கும் நெல் மூட்டைகள் உடனடியாக அகற்றி கொள்முதலை விரைவுபடுத்த வேண்டும் – அன்புமணி ராமதாஸ்
சென்னை, 17 ஜூலை (ஹி.ச) காவிரி பாசன மாவட்டங்களில் கோடைப்பருவ நெல் அறுவடை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், கொள்முதல் நிலையங்களில் ஏற்கனவே வாங்கப்பட்ட நெல் மூட்டைகள் கிடங்குகளுக்கு அனுப்பப்படாமல் குவிந்து கிடப்பதால், விவசாயிகள் தங்களின் விளைபொருளை
Anbumani


சென்னை, 17 ஜூலை (ஹி.ச)

காவிரி பாசன மாவட்டங்களில் கோடைப்பருவ நெல் அறுவடை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், கொள்முதல் நிலையங்களில் ஏற்கனவே வாங்கப்பட்ட நெல் மூட்டைகள் கிடங்குகளுக்கு அனுப்பப்படாமல் குவிந்து கிடப்பதால், விவசாயிகள் தங்களின் விளைபொருளை விற்பனை செய்ய முடியாமல் அவதிப்படுவதாக பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர் உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் சுமார் 1.60 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்ட கோடைப்பருவ நெல் தற்போது அறுவடை செய்யப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக 800-க்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டிருந்தாலும், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கொள்முதல் பணி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை கிடங்குகளுக்கும், அங்கிருந்து அரவை ஆலைகளுக்கும் அனுப்ப வேண்டிய சங்கிலித் தொடர் முறையாக செயல்படாததால், கொள்முதல் நிலையங்களிலேயே ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் இடப்பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதுடன், புதியதாக விவசாயிகள் கொண்டு வரும் நெல்லையும் வாங்க முடியாத நிலை உருவாகியுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும், பெரும்பாலான கொள்முதல் நிலையங்கள் திறந்தவெளியில் செயல்பட்டு வருவதால், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடையும் அபாயம் இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின்போது இதேபோன்ற அலட்சியத்தால் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் நனைந்து வீணான சம்பவத்தை நினைவுபடுத்திய அன்புமணி ராமதாஸ், அந்த தவறு மீண்டும் நிகழக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.

எனவே, கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளை உடனடியாக கிடங்குகளுக்கும், கிடங்குகளில் உள்ள மூட்டைகளை அரவை ஆலைகளுக்கும் போர்க்கால அடிப்படையில் அனுப்பி வைத்து, விவசாயிகளின் நெல்லை தடையின்றி கொள்முதல் செய்ய தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ