Enter your Email Address to subscribe to our newsletters

தாடேபள்ளி , 17 ஜூலை (ஹி.ச.)
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை ஒருங்கிணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ‘ஜெகன் 2.0 சூப்பர் ஆப்’ என்ற புதிய செயலியை, அக்கட்சியின் தலைவர் மற்றும் ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார்.
தாடேபள்ளியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நாடாளுமன்றக் கட்சி கூட்டத்தில் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் குடும்பத்தினருக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலி மூலம் கட்சியின் தகவல்கள், அறிவிப்புகள் மற்றும் நிகழ்ச்சிகள் அனைத்தும் தொண்டர்களை நேரடியாக சென்றடையும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஜெகன் மோகன் ரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தற்போதைய சூழ்நிலையில் சமூக வலைதளங்களில் கட்சி தொண்டர்கள் வெளியிடும் பதிவுகள் நீக்கப்படும் நிலை உள்ளது. இதனால் கட்சிக்கென தனியான டிஜிட்டல் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த செயலி மூலம் தொண்டர்கள் தங்களது கருத்துகளை சுதந்திரமாக தெரிவிக்க முடியும். மேலும், கட்சியுடன் எப்போதும் தொடர்பில் இருக்கவும் முடியும்.
கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் வகையில் இந்த செயலி செயல்படும்.
கட்சியின் பத்திரிகையாளர் சந்திப்புகள், தலைவர்களின் சுற்றுப்பயணங்கள், அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இதன் மூலம் தொண்டர்களுக்கு உடனுக்குடன் கிடைக்கும்.
மேலும், விரைவில் இந்த செயலியில் டிஜிட்டல் டைரி வசதி அறிமுகப்படுத்தப்படும் என்றும் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்தார்.
கட்சி தொண்டர்கள் இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் மூலம் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துமாறு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA