நீர்வரத்து குறைவால் ஆகாய கங்கை அருவியில் குளிக்க தடை - வனத்துறை அதிரடி
நாமக்கல் , 17 ஜூலை (ஹி.ச.) நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தலமாகும். இங்கு நாமக்கல் மட்டுமின்றி சேலம், ஈரோடு, கரூர், தர்மபுரி உள்பட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த பொதுமக்கள் சுற்றுலா வருவ
நீர்வரத்து குறைவால் ஆகாய கங்கை அருவியில் குளிக்க தடை - வனத்துறை அதிரடி


நாமக்கல் , 17 ஜூலை (ஹி.ச.)

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தலமாகும். இங்கு நாமக்கல் மட்டுமின்றி சேலம், ஈரோடு, கரூர், தர்மபுரி உள்பட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த பொதுமக்கள் சுற்றுலா வருவது வழக்கம்.

இயற்கை எழில் கொஞ்சும் கொல்லிமலையில் ஏராளமான சுற்றுலாத் தலங்கள் இருந்தாலும் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி சுற்றுலா பயணிகளின் முதல் விருப்ப தேர்வாக உள்ளது.

கொல்லிமலையில் கடந்த சில வாரங்களாக மழை பொழிவு இல்லாததால் ஆகாய கங்கை அருவியில் நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது.

சுமார் 300 அடி உயரத்தில் இருந்து ஆர்ப்பரித்து கொட்டும் இந்த அருவியில் தற்போது மிகக் குறைந்த அளவே தண்ணீர் வருவதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க முடியாத சூழல் நிலவி வருகிறது.

மேலும் அருவிக்கு செல்ல சுமார் 1300 செங்குத்தான படிக்கட்டுகள் இறங்கிச் செல்ல வேண்டியுள்ள நிலையில், குளிக்க தண்ணீர் இல்லாமல் சிரமப்பட்டு சென்று வருவதால் பயணிகளுக்கு ஏமாற்றம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

இதனைக் கருத்தில் கொண்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் சிரமத்தை தவிர்க்கும் பொருட்டு ஆகாய கங்கை அருவிக்கு செல்லவும், அங்கு குளிக்கவும் தற்காலிக தடை விதித்து நாமக்கல் மாவட்ட வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

மழை பெய்து அருவியில் மீண்டும் நீர்வரத்து சீரான பிறகு தடை நீக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b