Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 17 ஜூலை ( ஹி.ச.)
ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் கரப்பான் ஜனதா கட்சி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தொடர்ந்து போலீஸ் கண்காணிப்பு நடத்தப்படுவதை எதிர்த்து போராட்டக்காரர்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் ஆயிஷி கோஷ் சார்பில் வழக்கறிஞர்கள் சுபாஷ் சந்திரன் கே.ஆர். மற்றும் அனிருத் கே.பி. மூலம் இந்த பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மாணவர் செயல்பாட்டாளர் அபிஜீத் டிப்கே தலைமையிலான கரப்பான் ஜனதா கட்சியினர் ஜூன் 20 முதல் ஜந்தர் மந்தரில் தர்ணா மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அமைதியான முறையில் போராடும் அவர்கள் மீது டெல்லி போலீஸார் தொடர் கண்காணிப்பில் ஈடுபடுவதை இந்த மனு எதிர்க்கிறது.
மேலும் இம்மனுவில் கூறியிருப்பதாவது,
போராட்டக் களத்தில் பங்கேற்பாளர்கள் தொடர்ந்து புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கப்படுவதாகவும், ஜந்தர் மந்தரில் அமைக்கப்பட்டுள்ள நிரந்தர கண்காணிப்பு கோபுரம் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. இந்த கண்காணிப்பு பொதுவில் வெளியிடப்பட்ட சட்டப்பூர்வ அதிகாரம், நடைமுறை பாதுகாப்புகள் அல்லது அரசியலமைப்பு நியாயம் எதுவுமின்றி நடத்தப்படுகிறது.
போராட்டக் களத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மாணவர்களின் பெற்றோர், பாதுகாவலர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பப்படும் என்று கூறி போலீஸார் மாணவ போராட்டக்காரர்களை மிரட்டியுள்ளனர்.
இத்தகைய மிரட்டல்கள் கருத்து சுதந்திரம் மற்றும் அமைதியாக ஒன்றுகூடும் அரசியலமைப்பு உரிமைகள் மீது அச்சுறுத்தும் விளைவை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், கனமழையின் போதும் போதிய தங்குமிட வசதி இல்லாததால் நனைந்த ஆடைகளுடன் போராட்டக் களத்தில் இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட பெண் போராட்டக்காரர்கள் தொடர்ந்து புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கப்பட்டது அவர்களின் தனியுரிமை மற்றும் கண்ணியத்தின் மீதான அத்துமீறல் ஆகும்.
இந்த கண்காணிப்புக்கு அதிகாரம் அளிக்கும் சட்டப்பூர்வ விதி அல்லது பொதுவில் கிடைக்கக்கூடிய நெறிமுறை எதையும் அதிகாரிகள் வெளியிடவில்லை. சேகரிக்கப்பட்ட தனிப்பட்ட தரவுகளின் சேகரிப்பு, சேமிப்பு, பாதுகாப்பு மற்றும் பகிர்வை ஒழுங்குபடுத்தும் நடைமுறைகள் குறித்தும் எந்த தகவலும் இல்லை.
அமைதியான போராட்டக்காரர்கள் மீதான தொடர்ச்சியான மற்றும் ஊடுருவும் வெகுஜன கண்காணிப்பு அரசியலமைப்புக்கு விரோதமானது என அறிவிக்க வேண்டும்.
பொது ஒழுங்குக்கு உண்மையான மற்றும் உடனடி அச்சுறுத்தல் ஏற்படும் வரை ஜந்தர் மந்தரில் வெகுஜன புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதை நிறுத்தி வைக்க வேண்டும்.
கண்காணிப்புக்கான சட்டப்பூர்வ அடிப்படை மற்றும் தரவு கையாளுதல் நெறிமுறைகளை வெளியிட வேண்டும். சட்டவிரோதமாக சேகரிக்கப்பட்ட தனிப்பட்ட தரவுகளை அழிக்க வேண்டும். அமைதியான கூட்டங்களில் கண்காணிப்பை ஒழுங்குபடுத்துவதற்கான வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டும். அந்த இடத்தில் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பின் அளவை ஆய்வு செய்ய சுதந்திரமான குழு ஒன்றை அமைக்க வேண்டும்.
இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் இன்று தலைமை நீதிபதி தேவேந்தர் குமார் உபாத்யாயா மற்றும் நீதிபதி தேஜஸ் காரியா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் மூத்த வழக்கறிஞர் நந்திதா ராவ் மூலம் முன்வைக்கப்பட்டு அவசர விசாரணை கோரப்பட்டது.
இதற்கு இசைவு தெரிவித்த நீதிபதிகள் அமர்வு, இந்த வழக்கை திங்கள்கிழமை
(ஜூலை 20 ஆம் தேதி) விசாரணைக்கு பட்டியலிட ஒப்புக்கொண்டது.
தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கை விசாரிக்க டெல்லி உயர் நீதிமன்றம் ஜூலை 20 ஆம் தேதி பட்டியலிட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b