Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 ஜூலை (ஹி.ச.)
2027-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்புடன் பங்கேற்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
ஆதார அடிப்படையிலான கொள்கை உருவாக்கம், திறமையான மற்றும் உள்ளடக்கிய நிர்வாகம், வளர்ச்சித் திட்டமிடல் ஆகியவற்றுக்குத் தேவையான துல்லியமான மக்கள்தொகை, சமூக, பொருளாதார மற்றும் வீட்டுவசதித் தரவுகளை சேகரிக்கும் மிக முக்கியமான தேசியப் பணியாக 2027 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடைபெறுவதாக தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இந்தக் கணக்கெடுப்பின் முதல் கட்டமாக சுயவிவரக் கணக்கெடுப்பு ஜூலை 17 முதல் ஜூலை 31, 2026 வரை நடைபெறுகிறது. தொடர்ந்து வீட்டுப் பட்டியல் கணக்கெடுப்பு ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 30, 2026 வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு வரலாற்றில் முதல்முறையாக, பாதுகாப்பான இணையதளம் மற்றும் மொபைல் செயலி மூலம் பொதுமக்கள் தாங்களே சுயவிவரத் தகவல்களை பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். இந்த வசதியை பொதுமக்கள் முழுமையாகப் பயன்படுத்தி, அறிவிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் தங்களது விவரங்களை பதிவு செய்யுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
சுயவிவரக் கணக்கெடுப்பை மேற்கொள்ளாத குடும்பங்கள், ஆகஸ்ட் 1 முதல் 30 வரை நடைபெறும் வீட்டுப் பட்டியல் கணக்கெடுப்பின்போது கணக்கெடுப்பு அலுவலர்களால் நேரடியாக கணக்கெடுக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2027 மக்கள்தொகைக் கணக்கெடுப்பை ஒரு பகிரப்பட்ட தேசியப் பொறுப்பாகக் கருதி, ஒவ்வொரு குடும்பமும் முழுமையான மற்றும் துல்லியமான தகவல்களை வழங்கி கணக்கெடுப்பு அலுவலர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும், இதன் மூலம் மாநிலம் மற்றும் நாட்டின் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களுக்கு வலுவான தரவுத்தளம் உருவாகும் என்றும் ஆளுநர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P