Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 17 ஜூலை (ஹி.ச.)
கோவை செம்மொழி பூங்கா திட்டப்பணிகளில் சுமார் ரூ.40 கோடி வரை ஊழல் நடந்துள்ளதாக தென்மண்டல ஒப்பந்ததாரர்கள் சங்கம் புகார் அளித்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல் கடும் அதிர்ச்சி அளிப்பதாக பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
கடந்த திமுக ஆட்சியில் எந்தத் திட்டங்களில் எவ்வளவு கமிஷன் கிடைக்கும், எவ்வளவு ஊழல் செய்யலாம் என்ற நோக்கிலேயே செயல்பட்டதாக விமர்சித்துள்ளார்.
செம்மொழி பூங்கா திட்டத்தில் சுமார் ரூ.40 கோடி மதிப்பிலான போலி பில்கள் தயாரித்து கோவை மாநகராட்சி நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுவது, மக்களின் வரிப்பணம் சூறையாடப்பட்டிருப்பதற்கான சாட்சியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தேர்தல் செலவுக்காக 5 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட சாலைகளை மீண்டும் பணிகள் மேற்கொண்டதாகக் காட்டி அதிலும் முறைகேடு நடந்ததாக புகாரில் கூறப்பட்டிருப்பது மேலும் அதிர்ச்சி அளிப்பதாக வானதி சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் கோவை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக கூறிய அவர், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு இந்த குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இந்த முறைகேட்டில் தொடர்புடையவர்கள் யார் என்பதை கண்டறிந்து, அதற்கு துணைபோன அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை மூலம் வழக்குப் பதிவு செய்து, முறைகேடாக பயன்படுத்தப்பட்ட மக்களின் வரிப்பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P