நோயாளிகளிடம் லஞ்சம் வாங்கியதாக புகார் - சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 4 ஒப்பந்த ஊழியர்கள் அதிரடி பணிநீக்கம்
சென்னை, 17 ஜூலை (ஹி.ச) சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மகப்பேறு பிரிவுக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களிடம், அங்கு பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்கள் சிலர் பணம் வசூலிப்பதாக மருத்துவமனை நிர்வா
நோயாளிகளிடம் லஞ்சம் வாங்கியதாக புகார் - சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 4 ஒப்பந்த ஊழியர்கள் அதிரடி பணிநீக்கம்


சென்னை, 17 ஜூலை (ஹி.ச)

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மகப்பேறு பிரிவுக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களிடம், அங்கு பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்கள் சிலர் பணம் வசூலிப்பதாக மருத்துவமனை நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன.

குறிப்பாக அரசு மருத்துவமனையில் இலவச மருத்துவச் சேவை பெற வரும் ஏழை நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்களிடம் வீல்சேர், ஸ்ட்ரெச்சர் போன்ற அடிப்படை தேவைகளுக்காகவும், இதர பணிகளுக்காகவும் இந்த ஊழியர்கள் லஞ்சம் கேட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்த புகாரின் அடிப்படையில் மருத்துவமனையின் விஜிலென்ஸ் குழு தீவிர விசாரணை மேற்கொண்டது.

விசாரணையில் புகாருக்கு ஆளான நான்கு ஊழியர்கள் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர்கள் நான்கு பேரையும் உடனடியாக பணிநீக்கம் செய்து மருத்துவமனையின் டீன் கவிதா உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்தில் தமிழக முதலமைச்சர் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளிடம் லஞ்சம் வாங்கும் ஊழியர்கள் மீது எவ்வித சமரசமும் இன்றி உடனடி பணிநீக்கம் போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

அதன் தொடர்ச்சியாகவே, இந்த லஞ்சப் புகாரின் உண்மைத்தன்மை ஆராயப்பட்டு, சம்பந்தப்பட்ட 4 ஒப்பந்த ஊழியர்களும் உடனடியாக பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

அரசு மருத்துவமனைகளில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b