வீட்டில் பதுக்கி வைத்திருந்த போதை மாத்திரைகள் பறிமுதல் - இருவர் கைது
திருச்சி, 17 ஜூலை (ஹி.ச.) திருச்சி மாநகரில் சமீபகாலமாகவே போதை மாத்திரைகள், போதை ஊசிகளின் புழக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த 40 நாட்களில் மட்டும் போதை ஊசி செலுத்திக் கொண்டதால் 3 இளைஞர்கள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் திருச்சியையே உலுக
Drug


திருச்சி, 17 ஜூலை (ஹி.ச.)

திருச்சி மாநகரில் சமீபகாலமாகவே போதை மாத்திரைகள், போதை ஊசிகளின் புழக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த 40 நாட்களில் மட்டும் போதை ஊசி செலுத்திக் கொண்டதால் 3 இளைஞர்கள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் திருச்சியையே உலுக்கியது.

இதனைத் தொடர்ந்து, மாநகர காவல் ஆணையர் காமினி உத்தரவின் பேரில், போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் கோட்டை காவல் நிலைய போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், திருச்சி பெரிய கடை வீதி மல்லிகை தெரு பகுதியில் உள்ள கணேஷ் பாண்டியன் என்பவரது வீட்டில் சட்டவிரோதமாக போதை மாத்திரைகள் பதுக்கப்பட்டு, விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன்பேரில், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கணேஷ் பாண்டியனின் வீட்டை முற்றுகையிட்டு அதிரடி சோதனை நடத்தினர்.

இதில், போலீசார் கைப்பற்றிய போதைப்பொருட்களின் அளவை பார்த்து ஒட்டுமொத்த தமிழகமே அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது.

அந்த வீட்டில் இருந்து சுமார் 15,000 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், ரூ.1 லட்சம் ரொக்கம், 4 செல்போன்கள், 1 லேப்டாப், 1 இருசக்கர வாகனம், கத்தி - அரிவாள் ஆயுதங்கள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும், இந்த போதை மாத்திரைகளை வீட்டில் பதுக்கி வைத்து விற்றுக் கொண்டிருந்த கணேஷ் பாண்டியன் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த கார்த்திக் ஆகிய இருவரையும் கோட்டை போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் இருவரிடமும் தற்போது போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மாத்திரைகள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டன? இதன் பின்னணியில் பெரிய புள்ளிகள் யாரேனும் உள்ளனரா? யார் - யாருக்கெல்லாம் இவை விற்பனை செய்யப்பட இருந்தன? உள்ளிட்ட கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் போதைப்பொருட்களை ஒழிக்க கடும் நடவடிக்கைகளை எடுக்குமாறு காவல்துறை உயரதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அண்மையில் உத்தரவிட்டார்.

இதையடுத்து, மாநிலம் முழுவதும் போலீசார் நடத்தி வரும் அதிரடி சோதனைகளில் இதுபோன்ற பல போதைப்பொருட்கள் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

Hindusthan Samachar / ANANDHAN