Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 17 ஜூலை (ஹி.ச)
தமிழகத்தில் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்வதற்காகவும், எதிர்பாராத மின்தடை ஏற்பட்டால் உடனுக்குடன் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும் நியமிக்கப்பட்ட தற்காலிக பணியாளர்களின் பணிக்காலம் மேலும் 46 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 2-ஆம் தேதி முதல் 45 நாட்கள் காலத்திற்கு தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் மின் விநியோகம் மற்றும் பராமரிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
குறிப்பாக மழை, பலத்த காற்று உள்ளிட்ட காரணங்களால் ஏற்படும் திடீர் மின்தடைகளை விரைவாக சரிசெய்யும் பணியில் அவர்கள் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், தடையற்ற மின்சார சேவையை தொடர்ந்து வழங்கவும், எதிர்பாராத மின்தடைகளை உடனடியாக சரிசெய்யவும் கூடுதல் பணியாளர்கள் தொடர்ந்து தேவைப்படுவதால், அவர்களின் பணிக்காலம் மேலும் 46 நாட்களுக்கு நீட்டித்து தமிழ்நாடு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நீட்டிப்பு மூலம் மின் விநியோக சேவையில் ஏற்படும் இடையூறுகளை குறைத்து, பொதுமக்களுக்கு சீரான மின்சார சேவையை வழங்க முடியும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / P YUVARAJ