Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 17 ஜூலை (ஹி.ச.)
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் இருந்து நவ்வலடி செல்லும் சாலையில் அரசுடமையாக்கப்பட்ட வங்கி கனரா வங்கி ஒன்றின் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது.
வழக்கம்போல, அப்பகுதியைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் அந்த ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கச் சென்றுள்ளார்.
பணத்தை எடுத்துப் பார்த்தவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
இயந்திரத்தில் இருந்து வந்த 500 ரூபாய் நோட்டுகள், பார்ப்பதற்கு ஏதோ கள்ள நோட்டுகள் போலத் தெரிந்தன. உடனடியாக அவர் வங்கி நிர்வாகத்திற்குத் தகவல் தெரிவித்தார்.
வங்கி அதிகாரிகள் விரைந்து வந்து, அந்த ஏடிஎம் இயந்திரத்தில் டெபாசிட் செய்யப்பட்டிருந்த பணத்தை ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்போது, இயந்திரத்தில் இருந்த பணத்தில் ரூ. 500 மதிப்பிலான 9 நோட்டுகள் கள்ள நோட்டுகள் என்பது உறுதி செய்யப்பட்டது.
உடனடியாக இது குறித்து திசையன்விளை காவல் நிலையத்தில் வங்கி மேலாளர் புகார் அளித்தார்.
புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையைத்
தொடங்கியுள்ளனர்.
ஏடிஎம் இயந்திரத்தில் கள்ள நோட்டுகளை வைத்தது யார்? பணத்தை நிரப்பும் பணியின்போது ஏதேனும் குளறுபடி நடந்ததா? அல்லது திட்டமிட்டே யாராவது மோசடியில் ஈடுபட்டார்களா? என்பது குறித்து ஏடிஎம் மையத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைக் கொண்டு காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
அரசு வங்கி ஏடிஎம்-லேயே கள்ள நோட்டுகள் புழக்கத்தில் வந்தது, வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
வங்கியின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN