Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 ஜூலை (ஹி.ச.)
அரசு நிர்ணயிக்கும் கட்டணத்திலேயே ஆம்னி பேருந்துகளை இயக்கத் தயாராக இருப்பதாக அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கூட்டமைப்பின் நிறுவனர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
பல ஆண்டுகளாக சுற்றுலா பர்மிட் கொண்ட ஆம்னி பேருந்துகள் வழக்கமான பயண சேவைக்காக பயன்படுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். எனவே, பிற மாநிலங்களில் நடைமுறையில் உள்ளதைப் போல, சுற்றுலா பயன்பாட்டிற்கென தனி சுற்றுலா பர்மிட் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும், 'மேக்ஸ் கேப்'
(Tourist Van) வாகனங்களுக்கு தமிழகத்தில் 12 இருக்கைகள் வரை மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாகவும், ஆனால் அண்டை மாநிலங்களில் 32 மற்றும் 35 இருக்கைகள் கொண்ட வாகனங்களுக்கு குறைந்த சாலை வரியுடன் அனுமதி வழங்கப்படுவதால், பலர் அங்கு சென்று பர்மிட் பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
இதனால் தமிழகத்திற்கு வர வேண்டிய சாலை வரி வருவாய் பிற மாநிலங்களுக்கு செல்வதாகக் கூறிய அவர், தமிழகத்திலேயே சுற்றுலா பேருந்துகளுக்கான பர்மிட் வழங்கப்பட்டால் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைப்பதுடன், சுற்றுலாத் தலங்களில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களும் பொருளாதார ரீதியாக பயனடைவார்கள் என்றார்.
மேலும், புதியதாக பொறுப்பேற்றுள்ள முதல்வர் விஜய் தலைமையிலான அரசு, லஞ்சம் மற்றும் முறைகேடுகளற்ற நிர்வாகத்தை வழங்கி வருவதாகவும், தற்போது பர்மிட் பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டுமே செலுத்தி அனுமதி பெற முடிகிறது என்றும் பாண்டியன் தெரிவித்தார்.
Hindusthan Samachar / GOKILA arumugam