அமர்நாத் யாத்திரை - 3.45 லட்சம் பேர் தரிசனம்
ஸ்ரீநகர் , 17 ஜூலை (ஹி.ச.) காஷ்மீரில் ஆண்டுதோறும் நடைபெறும் அமர்நாத் யாத்திரை கடந்த 3-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வருகிற ஆகஸ்டு 28-ந் தேதி யாத்திரை நிறைவடைகிறது. இந்தநிலையில், அமர்நாத் குகைக்கோவிலில் உள்ள பனிலிங்கத்தை இதுவரை 3.45 லட்சம்
A


ஸ்ரீநகர் , 17 ஜூலை (ஹி.ச.)

காஷ்மீரில் ஆண்டுதோறும் நடைபெறும் அமர்நாத் யாத்திரை கடந்த 3-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

வருகிற ஆகஸ்டு 28-ந் தேதி யாத்திரை நிறைவடைகிறது.

இந்தநிலையில், அமர்நாத் குகைக்கோவிலில் உள்ள பனிலிங்கத்தை இதுவரை 3.45 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில், அமர்நாத் யாத்திரையின் 16-வது குழு இன்று அதிகாலை ஸ்ரீநகரில் உள்ள பகவதி நகர் யாத்ரி நிவாஸில் இருந்து புறப்பட்டுச் சென்றது.

இந்த குழுவில் 4,640 பக்தர்கள் இடம்பெற்றிருந்தனர்.

171 வாகனங்கள் கொண்ட அணிவகுப்பில் சென்ற இந்த குழுவில், மத்திய காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள பால்டால் வழித்தடம் வழியாக 1,626 பக்தர்களும், தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் வழித்தடம் வழியாக 3,014 பக்தர்களும் பயணம் மேற்கொண்டனர்.

இது குறித்து, அதிகாரிகள் கூறுகையில், பால்டால் செல்லும் வாகன அணிவகுப்பு அதிகாலை 2.42 மணிக்கும், பஹல்காம் செல்லும் அணிவகுப்பு அதிகாலை 3.11 மணிக்கும் முகாமில் இருந்து புறப்பட்டதாக தெரிவித்தனர்.

அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு கடந்த ஏப்ரல் 15-ந் தேதி தொடங்கியது. ஒரு நபருக்கு ரூ.150 கட்டணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும் என்றும், மருத்துவ சான்றிதழ் கட்டாயம் கொண்டு வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு 5 நாட்களில் பனிலிங்கம் 90 சதவீதம் அளவுக்கு உருகியதாக கூறப்பட்ட போதிலும், அமர்நாத் யாத்திரைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA