Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 17 ஜூலை (ஹி.ச.)
தமிழக சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், சென்னை சீரணி அரங்கத்தை மீண்டும் கட்டி, அங்கு கிறிஸ்தவ நற்செய்தி (சுவிசேஷ) கூட்டங்கள் நடத்தும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தமக்கும் ஏற்புடையது என்றும், இதுதொடர்பாக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன் என்றும் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து,அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
2003 ஆகஸ்ட் 9 மற்றும் 10-ஆம் தேதிகளில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு, பொதுப் பணித்துறை மூலம் சீரணி அரங்கத்தை இடித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
அப்போது, பொது அமைதிக்கு பாதிப்பு, போக்குவரத்து நெரிசல் மற்றும் அரசு இடத்தில் ஒரே மதம் சார்ந்த நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டதால் ஏற்பட்ட பிரச்சினைகள் உள்ளிட்ட காரணங்களால் அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சீரணி அரங்கில் பல்வேறு அரசியல் நிகழ்ச்சிகளுடன், கிறிஸ்தவ மத சுவிசேஷக் கூட்டங்கள் மற்றும் மதமாற்றத்தை ஊக்குவிப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிகழ்வுகளும் நடைபெற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், மீண்டும் கடற்கரையில் சீரணி அரங்கத்தை அமைத்து அங்கு கிறிஸ்தவ சுவிசேஷக் கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று சபாநாயகர் கூறியிருப்பது ஏற்க முடியாதது என நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
மேலும், எந்த சூழ்நிலையிலும் ஆசை காட்டியோ அல்லது கட்டாயப்படுத்தியோ மதமாற்றத்திற்கு வழிவகுக்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது என்றும், முதலமைச்சர் விஜய் இதுபோன்ற கோரிக்கைகளை ஏற்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ