சென்னையில் வீட்டு வாசலில் 8 அடி உயர கஞ்சா செடி வளர்ப்பு - போலீசாரை பார்த்ததும் வெட்டி மறைத்த நபர்
சென்னை, 17 ஜூலை (ஹி.ச.) சென்னை வேப்பேரி பகுதியில் வீட்டின் முன்பு கஞ்சா செடி வளர்த்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் சுமார் 8 அடி உயரமுள்ள கஞ்சா செடியை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேப்ப
Kanja


சென்னை, 17 ஜூலை (ஹி.ச.)

சென்னை வேப்பேரி பகுதியில் வீட்டின் முன்பு கஞ்சா செடி வளர்த்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கில் சுமார் 8 அடி உயரமுள்ள கஞ்சா செடியை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேப்பேரி ஆரியன் லேண்ட் பகுதியில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (53) என்பவர் தனது வீட்டின் முன்பாக கஞ்சா செடி வளர்த்து வருவதாக அப்பகுதி மக்கள் நேற்று மாலை வேப்பேரி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் முதற்கட்ட சோதனையில் கஞ்சா செடியைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

தொடர்ந்து தீவிரமாக ஆய்வு செய்தபோது, வீட்டின் முன்பகுதியில் செடி வெட்டப்பட்டிருந்த தடயங்கள் இருப்பது தெரியவந்தது.

பின்னர் வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் சோதனை மேற்கொண்டபோது, குப்பைத்தொட்டிக்குள் வெட்டி மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 8 அடி உயரமுள்ள கஞ்சா செடியை போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

போலீசார் மேற்கொண்ட விசாரணையில், காவல்துறையினர் வருவதை அறிந்த ராஜ்குமார், வீட்டின் முன்பு வளர்த்து வந்த கஞ்சா செடியை அவசரமாக வெட்டி குப்பைத்தொட்டியில் மறைத்தது தெரியவந்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக வேப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் ராஜ்குமார் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / P YUVARAJ