Enter your Email Address to subscribe to our newsletters

கரூர், 17 ஜூலை (ஹி.ச.)
கரூர் மாவட்டத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் வீட்டிற்கு சோதனைக்கு சென்ற பொழுது அவர்களை தடுத்து நிறுத்தி திமுகவினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றி தாக்கியதாக கரூர் நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் உள்ளிட்ட 120 நபர்களுக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
முன்ஜாமின் நிபந்தனையாக, சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் தினமும் காலை 10 மணி மற்றும் மாலை 6 மணிக்கு கையொப்பமிட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, கரூர் நகர காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்கில், மாநகராட்சி மேயர் கவிதா, திமுக மாவட்ட துணை செயலாளர் மகேஸ்வரி உள்ளிட்ட 70க்கும் மேற்பட்டோர் இன்று காவல் நிலையத்தில் ஆஜராகி கையொப்பமிட்டனர்.
அதேபோல், தாந்தோணி மலை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்கில், கொங்கு மெஸ் மணி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட உள்ளனர்.
2023-ஆம் ஆண்டு வருமான வரித்துறை சோதனையின்போது அதிகாரிகள் தாக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது
Hindusthan Samachar / ANANDHAN