கீழடி 11ஆம் கட்ட அகழாய்வில் இதுவரை 25 உறைகிணறுகள் கண்டெடுப்பு
சிவகங்கை, 17 ஜூலை (ஹி.ச.) வைகை நதிக்கரையோர நாகரிகத்தை வெளிக்கொணரும் நோக்கில் மத்திய தொல்லியல் துறை, 2014- ஆம் ஆண்டு முதன்முறையாக சிவகங்கை மாவட்டம், கீழடியில் அகழாய்வைத் தொடங்கியது. பின்னர், தமிழ்நாடு தொல்லியல் துறை தொடர்ந்து மேற்கொண்டு வரும் அகழாய
Archeological Well


சிவகங்கை, 17 ஜூலை (ஹி.ச.)

வைகை நதிக்கரையோர நாகரிகத்தை வெளிக்கொணரும் நோக்கில் மத்திய தொல்லியல் துறை, 2014- ஆம் ஆண்டு முதன்முறையாக சிவகங்கை மாவட்டம், கீழடியில் அகழாய்வைத் தொடங்கியது. பின்னர், தமிழ்நாடு தொல்லியல் துறை தொடர்ந்து மேற்கொண்டு வரும் அகழாய்வுகளில் சுமார் 2,600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்கள் கல்வி, தொழில், விவசாயம் உள்ளிட்டத் துறைகளில் முன்னேறிய சமூகமாக இருந்ததற்கான பல்வேறு சான்றுகள் கிடைத்துள்ளன.

அதன் தொடர்ச்சியாக, வைகை ஆற்றையொட்டியுள்ள பகுதிகளில் வாழ்ந்த மக்கள், வறட்சி காலங்களில் நீர் தேவையைப் பூர்த்திச் செய்ய சுடுமண்ணால் செய்யப்பட்ட உறைகிணறுகளை அமைத்து பயன்படுத்தியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதுவரை 3 அடுக்குகள் முதல் 32 அடுக்குகள் வரை கொண்ட உறைகிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, 6- ஆம் கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்ட 32 அடுக்குகள் கொண்ட உறைகிணறு, தமிழ்நாட்டிலேயே அதிக அடுக்குகள் கொண்ட உறைகிணறாகக் கருதப்படுகிறது.

தற்போதைய அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட உறைகிணற்றின் அருகே சுடுமண் குழாய்கள் மற்றும் செங்கற்களால் கட்டப்பட்ட வடிகால் அமைப்புகளும் கண்டறியப்பட்டுள்ளன.

இதனால், அப்பகுதியில் தொழிற்சாலை அல்லது உற்பத்தி மையம் செயல்பட்டிருக்கலாம் என்றும், உறைகிணற்றிலிருந்து நீரை எடுத்துச் செல்ல வடிகால் அமைப்பு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும் தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இதுவரை அகரம் பகுதியில் 12 உறைகிணறுகளும், கீழடியில் 13 உறைகிணறுகளும் என மொத்தம் 25 உறைகிணறுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் சில வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என்றும், ஒன்றின் மேல் ஒன்று, ஒன்றுக்குள் ஒன்று சொருகும் வகை மற்றும் இறுக்கமாக பொருந்தும் வகை என மூன்று விதமான கட்டமைப்புகளில் அவை அமைந்துள்ளதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த கண்டுபிடிப்புகள், பண்டைய தமிழர்களின் நீர்மேலாண்மைத் திறன் மற்றும் தொழில்நுட்ப அறிவை வெளிப்படுத்தும் முக்கிய சான்றுகளாகக் கருதப்படுகின்றன.

கீழடி அகழாய்வில் தங்க அணிகலன்கள், மண்பாண்ட ஓடுகள் உள்பட 5,000- க்கும் மேற்பட்ட தொல்லியல் பொருட்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அகழாய்வில் கிடைக்கப் பெற்ற தொல்லியல் பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள கீழடி அருங்காட்சியத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN