Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 17 ஜூலை (ஹி.ச.)
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை தேயிலை எஸ்டேட் பகுதி முழுவதும் வனத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, எஸ்டேட் நிறுவனத்தின் பெயர் பலகைகள் அகற்றப்பட்டு வருகின்றன.
மேலும், அந்தப் பகுதியை மீண்டும் அடர்ந்த வனமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு, காக்காச்சி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 96 ஆண்டுகளாக தனியார் பம்பாய் பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் (BBTC) நிறுவனம் தேயிலை எஸ்டேட்டை நடத்தி வந்தது.
1929-ஆம் ஆண்டு சிங்கம்பட்டி ஜமீனிடமிருந்து 100 ஆண்டுகள் குத்தகைக்கு பெறப்பட்ட இந்த நிலத்தின் குத்தகைக் காலம் நிறைவடைவதை முன்னிட்டு, எஸ்டேட் பகுதியை இயற்கை வனமாக மாற்றி வனத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, 2024-ஆம் ஆண்டிலேயே தேயிலை உற்பத்தி நிறுத்தப்பட்டு, 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு வழங்கப்பட்டது.
பல தலைமுறைகளாக அங்கு வாழ்ந்த தொழிலாளர்களில் பெரும்பாலானோர் பின்னர் குடியிருப்புகளை காலி செய்தாலும், இன்னும் சிலர் அப்பகுதியில் வசித்து வருகின்றனர்.
மொத்தம் 8,373.57 ஏக்கர் நிலத்தில், முதற்கட்டமாக 8,152.13 ஏக்கர் 2025-ஆம் ஆண்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
தொழிற்சாலைகள் மற்றும் குடியிருப்புகள் இருந்த காரணத்தால் மீதமிருந்த 221.44 ஏக்கரும் தற்போது வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால், மாஞ்சோலை எஸ்டேட் பகுதி முழுவதும் வனத்துறை கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு உள்ளிட்ட பகுதிகளில் இருந்த BBTC நிறுவனத்தின் பெயர் பலகைகள் அகற்றப்பட்டுள்ளன. தேயிலை தொழிற்சாலை கட்டிடங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகளும் இடிக்கப்பட்டு வருகின்றன.
இதனால் ஒருகாலத்தில் தொழிலாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் நடமாட்டம் மிகுந்திருந்த மாஞ்சோலை, தற்போது வெறிச்சோடிய நிலையில் காணப்படுகிறது.
அடுத்த கட்டமாக, மாஞ்சோலையை மீண்டும் இயற்கை வனமாக மாற்ற வனத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கான அறிவியல் ஆய்வுப் பணிகள் தனியார் தொண்டு நிறுவனம் மூலம் நடைபெற்று வருகின்றன.
மேலும், எஸ்டேட் பகுதியை அடர்ந்த வனமாக மாற்றுவது தொடர்பாக மத்திய குழுவினர் விரைவில் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam