தமிழகத்தில் MBBS, BDS விண்ணப்பிக்க ஜூலை 23 கடைசி நாள் – மருத்துவத் தேர்வுக் குழு அறிவிப்பு
தமிழ்நாடு, 17 ஜூலை (ஹி.ச.) தமிழகத்தில் 2026–2027 கல்வியாண்டிற்கான MBBS மற்றும் BDS படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூலை 23, 2026 மாலை 5 மணி வரை மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மருத்துவத் தேர்வுக் குழு தெரிவி
மருத்துவர்கள்


தமிழ்நாடு, 17 ஜூலை (ஹி.ச.)

தமிழகத்தில் 2026–2027 கல்வியாண்டிற்கான MBBS மற்றும் BDS படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூலை 23, 2026 மாலை 5 மணி வரை மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மருத்துவத் தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.

மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, விண்ணப்பத்திற்குத் தேவையான ஆவணங்களின் பட்டியல் கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியிடப்பட்டது. மேலும், போதுமான கால அவகாசம் வழங்கும் வகையில், ஆன்லைன் விண்ணப்பப் பதிவு ஜூன் 29-ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது.

இதுவரை 41 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முழுமையான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. நீட் (NEET) தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், விண்ணப்பச் சாளரம் மேலும் ஒரு வாரம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அனைத்து விண்ணப்பங்களையும் பரிசீலனை செய்தல், தகுதியற்ற விண்ணப்பதாரர்களின் பட்டியலை வெளியிடுதல், குறைதீர்ப்பு நடைமுறைகளை மேற்கொள்ளுதல் மற்றும் மருத்துவ கலந்தாய்வுக்கான கால அட்டவணை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, விண்ணப்பிக்க வழங்கப்பட்டுள்ள கடைசி தேதி எந்தச் சூழலிலும் நீட்டிக்கப்படாது என்று மருத்துவத் தேர்வுக் குழு தெளிவுபடுத்தியுள்ளது.

எனவே, மாணவர்கள் கடைசி நேரத்தை எதிர்பார்க்காமல், தேவையான ஆவணங்களுடன் தங்களது விண்ணப்பங்களை முன்கூட்டியே பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam