Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 ஜூலை (ஹி.ச)
தியாகிகள் தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள தியாகிகள் நினைவிடத்தில் அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
நாட்டின் விடுதலைக்காகவும், மொழி மற்றும் உரிமைப் போராட்டங்களுக்காகவும் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த தியாகிகளை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இதையொட்டி சென்னை கிண்டியில் அமைந்துள்ள தியாகிகள் நினைவிடத்தில் இன்று அரசு சார்பில் மரியாதை நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழக அரசு சார்பில் மணிமண்டப வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தியாகிகளின் திருவுருவப் படங்களுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
தியாகி ஆர்யா (எ) பாஷ்யம் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையின் கொடிக்கம்பத்தில் பிரிட்டிஷ் கொடியை இறக்கி, இந்திய தேசியக் கொடியை ஏற்றிய மாவீரர். தியாகி சங்கரலிங்கனார் சென்னை மாகாணத்திற்கு 'தமிழ்நாடு' எனப் பெயர் சூட்டக் கோரி 79 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்தவர்.தியாகி செண்பகராமன் சுதந்திரப் போராட்டத்திற்கு 'ஜெய் ஹிந்த்' என்ற தாரக மந்திரத்தை வழங்கி, சர்வதேச அளவில் இந்தியாவிற்கான ஆதரவைத் திரட்டியவர்.
இந்நிகழ்ச்சியில் தியாகி சங்கரலிங்கனார், தியாகி செண்பகராமன், தியாகி ஆர்யா உள்ளிட்ட தியாகிகளின் நினைவிடங்களில் அமைச்சர்கள் ஆனந்த், ராஜ்மோகன், வெங்கட்ரமணன், வன்னி அரசு, மரிய வில்சன் ஆகியோர் மலர்வளையம் வைத்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தினர்.
தியாகிகளின் தியாகத்தையும், நாட்டுக்கு அவர்கள் ஆற்றிய அரும்பணிகளையும் நினைவுகூரும் வகையில் இந்த நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
Hindusthan Samachar / vidya.b