9 பவுன் நகைக்காக பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டது அம்பலம் - வாலிபர் கைது
நெல்லை, 17 ஜூலை (ஹி.ச.) நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள சிங்கம்பாறையை சேர்ந்தவர் ஆபேல் ராஜா. இவரது மனைவி மரிய ஜெயா(வயது 41). ஆபேல்ராஜா கோவையில் வேலை பார்த்து வருகிறார். மரிய ஜெயா மார்க்கெட்டிங் தொழில் செய்து வந்த நிலையில், பல்வேறு ஊர்களிலு
Mukkoodal Police Station


நெல்லை, 17 ஜூலை (ஹி.ச.)

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள சிங்கம்பாறையை சேர்ந்தவர் ஆபேல் ராஜா. இவரது மனைவி மரிய ஜெயா(வயது 41).

ஆபேல்ராஜா கோவையில் வேலை பார்த்து வருகிறார். மரிய ஜெயா மார்க்கெட்டிங் தொழில் செய்து வந்த நிலையில், பல்வேறு ஊர்களிலும் வயதானவர்கள் இருக்கும் வீடுகளில் சென்று அவர்களுக்கு உதவி செய்து வந்துள்ளார்.

அந்த வகையில் கடந்த 9-ந்தேதி தனது மொபட்டில் நெல்லைக்கு செல்வதாக விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த தனது கணவரிடம் கூறிவிட்டு சென்ற மரிய ஜெயா, அதன்பின்னர் இரவு நேரமாகியும் வீடு திரும்பிவில்லை. இதனால் 10-ந்தேதி ஆபேல்ராஜா முக்கூடல் போலீசில் தனது மனைவி காணாமல் போனது குறித்து புகார் அளித்துள்ளார்.

அதன்படி போலீசார் மாயம் என வழக்குப்பதிவு செய்து தேடி வந்துள்ளனர். இந்த நிலையில் டவுனில் கல்லணை மாநகராட்சி பள்ளி எதிரே உள்ள ஒரு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக டவுன் போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அந்த பெண் மாயமான மரியஜெயா என்பது தெரியவந்தது.

இதையடுத்து மரிய ஜெயா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து மர்மச்சாவு என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் அவர் கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் தங்க நகைகளை காணவில்லை. இதனிடையே பிரேத பரிசோதனையில் அவர் தலையில் காயங்கள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர் அடித்துக்கொலை செய்யப்பட்டது உறுதியான நிலையில், அவரை கொலை செய்த நபர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

அதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

எங்கு சென்றாலும் வேலைகள் முடிந்ததும் இரவில் சிங்கம்பாறைக்கு சென்று குழந்தைகளை கவனித்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். ஊர் ஊராக சென்று வரும் மரிய ஜெயா ஆலங்குளத்தில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து வைத்துள்ளார்.

அந்த வகையில் டவுன் கல்லணை பள்ளி அருகே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வைத்திருந்தார். சம்பவத்தன்று அவர் டவுனுக்கு வந்தபோது, அவருடன் ஏற்கனவே பழக்கமான தச்சநல்லூர் செல்வவிக்னேஷ் நகர் குறிஞ்சி தெருவை சேர்ந்த குமார் மகன் சுரேஷ்குமார்(26) வந்துள்ளார்.

அந்த வீட்டில் வைத்து 2 பேருக்கும் வாக்குவாதம் ஏற்படவே, ஆத்திரத்தில் சுரேஷ்குமார் கட்டையால் மரிய ஜெயாவை பின்பக்க தலையில் அடித்துக்கொலை செய்துள்ளார். பின்னர் அவர் கழுத்தில் அணிந்திருந்த நகைகளை பறித்துவிட்டு தப்பிச்சென்றுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா? பெண்ணிடம் பறித்த நகைகள் எங்கே? என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN