மத்திய மந்திரி அமித்ஷா இன்று மேற்கு வங்காளம் பயணம்
புதுடெல்லி , 17 ஜூலை (ஹி.ச.) மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று முதல் 19-ந்தேதி வரை 3 நாட்கள் பயணமாக மேற்கு வங்காளம் செல்கிறார். இந்தப் பயணத்தின்போது எல்லைப் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு மற்றும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளில்
A


புதுடெல்லி , 17 ஜூலை (ஹி.ச.)

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று முதல் 19-ந்தேதி வரை 3 நாட்கள் பயணமாக மேற்கு வங்காளம் செல்கிறார்.

இந்தப் பயணத்தின்போது எல்லைப் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு மற்றும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார்.

நாளை (18-ந்தேதி) சிலிகுரியில் உள்ள ஜுமாகாச் எல்லைச் சாவடிக்கு செல்லும் அமித்ஷா, அங்கு எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுடன் கலந்துரையாடுகிறார்.

தொடர்ந்து, எல்லைப் பாதுகாப்புப் படையின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

பின்னர், மேற்கு வங்காளத்தின் எல்லைப் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்து நடைபெறும் உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்துக்கு தலைமை தாங்குகிறார். மேலும், பிறப்பு மற்றும் இறப்பு பதிவு தொடர்பான ஆய்வுக் கூட்டத்திலும் கலந்து கொள்கிறார்.

பயணத்தின் கடைசி நாளான 19-ந்தேதி கொல்கத்தாவில் நடைபெறும் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்த ஆய்வுக் கூட்டத்துக்கு அமித்ஷா தலைமை தாங்குகிறார்.

அதன்பின்னர், அலிபோரில் உள்ள தேசிய நூலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘சொற்களின் அருங்காட்சியகம்’ முதல் கட்டத்தை திறந்து வைக்கிறார்.

தொடர்ந்து, கொல்கத்தாவில் உள்ள பிஸ்வா பங்களா மாநாட்டு மையத்தில் அமுல் டெய்ரியின் தயிர் பதப்படுத்தும் ஆலைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்று, அந்தத் திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA