Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 17 ஜூலை (ஹி.ச.)
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் நில கண்காணிப்பாளர் முருகானந்தம், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், பழனி தண்டாயுதபாணி சுவாமி மடத்துக்கு சொந்தமான நிலங்களை, பதிவுத்துறையின் விதிகளை பின்பற்றாமல் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் முறைகேடாக சேதுபதி மற்றும் வெள்ளத்துரை ஆகியோரின் பெயரில் பதிவு செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில், கோவில் தரப்பில் பத்திரப்பதிவு செய்யக்கூடாது என மனு அளிக்கப்பட்டிருந்த போதிலும், அதனை பரிசீலிக்காமல் பதிவுத்துறை விதி 22A-ஐ மீறி பத்திரப்பதிவு செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பான வழக்கில், அந்த பத்திரப்பதிவு செல்லாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை இரு நீதிபதிகள் அமர்வு ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பான வழக்கு தற்போது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
எனவே, சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் தூய கரங்களுடன் நீதிமன்றத்தை அணுகவில்லை என்பதால், அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது; அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோவில் நில கண்காணிப்பாளர் முருகானந்தம் தனது இடையீட்டு மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam