பள்ளிக்கரணை சதுப்பு நில வழக்கு - சுற்றுச்சூழல் அனுமதி ரத்து விவகாரத்தில் மனுவை விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு
சென்னை, 17 ஜூலை (ஹி.ச.) சென்னை பெரும்பாக்கம் அருகே ராம்சார் அங்கீகாரம் பெற்ற பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில் 1,250 வீடுகள் கொண்ட பிரிகேட் மார்கன் ஹைட்ஸ் அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதி ரத்து செய்யப்பட்
பள்ளிக்கரணை


சென்னை, 17 ஜூலை (ஹி.ச.)

சென்னை பெரும்பாக்கம் அருகே ராம்சார் அங்கீகாரம் பெற்ற பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில் 1,250 வீடுகள் கொண்ட பிரிகேட் மார்கன் ஹைட்ஸ் அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதி ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து கட்டுமான நிறுவனங்கள் தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.

இந்த திட்டத்திற்கு தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை, வனத்துறை, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA) மற்றும் மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் (SEIAA) கடந்த 2025 ஜனவரி மாதம் அனுமதி வழங்கியிருந்தது. இதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இதையடுத்து, அனுமதியை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், கடந்த 2025 அக்டோபரில் கட்டுமானப் பணிகளுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

பின்னர், கடந்த மே 8-ஆம் தேதி நடைபெற்ற மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையக் கூட்டத்தில், தமிழ்நாடு ஈரநில ஆணையத்தின் தடையில்லாச் சான்றிதழ் பெறாமல் கட்டுமானத்தைத் தொடங்கியதாகக் கூறி, திட்டத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதி ரத்து செய்யப்பட்டது.

இந்த முடிவை எதிர்த்து பிரிகேட் எண்டர்பிரைசஸ் லிமிடெட் மற்றும் மார்கன் ஏசியா பிரைவேட் லிமிடெட் நிறுவனங்கள் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தன.

இந்த மனு தலைமை நீதிபதி சூரியகாந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பக்ஷி, வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

நிறுவனங்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன், சுமார் ரூ.2,000 கோடி மதிப்பிலான திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதி முன் அறிவிப்பு இன்றி ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் நிறுவனங்களுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் வாதிட்டார். மேலும், தேவையான குறைபாடுகளை சரிசெய்ய நிறுவனங்கள் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஹரிப்பிரியா, சுற்றுச்சூழல் அனுமதி தொடர்பான விவகாரங்களை விசாரிக்க தேசிய பசுமை தீர்ப்பாயமே (NGT) உரிய அமைப்பு என்பதால், உச்சநீதிமன்றம் இந்த மனுவை விசாரிக்கக் கூடாது என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சுற்றுச்சூழல் அனுமதி ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் முதலில் சென்னை உயர்நீதிமன்றம் அல்லது தேசிய பசுமை தீர்ப்பாயத்தை அணுகியிருக்க வேண்டும் என்றும், நேரடியாக உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்ததை ஏற்க முடியாது என்றும் தெரிவித்தனர்.

மேலும், மனுதாரர்கள் சென்னை உயர்நீதிமன்றம் அல்லது தேசிய பசுமை தீர்ப்பாயத்தை அணுகி தங்களது கோரிக்கையை முன்வைக்கலாம் என்றும், அங்கு தாக்கல் செய்யப்படும் மனுவை விரைவாக விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், கட்டுமான நிறுவனங்களின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Hindusthan Samachar / GOKILA arumugam