Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 ஜூலை (ஹி.ச.)
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் உறுப்பினர் செயலராக அலர்மேல் மங்கை நியமிக்கப்பட்டிருப்பதற்கு சுற்றுச்சூழல் அமைப்பான பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பு எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டுள்ள அலர்மேல் மங்கையின் நியமனத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.
மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் என்பது மிகவும் தொழில்நுட்பம் சார்ந்த, சுற்றுச்சூழல் அறிவியல் சார்ந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அமைப்பு. காற்று மாசு, நீர் மாசு, தொழிற்சாலைக் கழிவுகள், ஆபத்தான ரசாயனங்கள் குறித்து ஆய்வு செய்து அனுமதி வழங்குதல் மற்றும் கண்காணித்தல் போன்ற மிக முக்கியமான பொறுப்புகளை இந்த வாரியம் கொண்டுள்ளது.
இத்தகைய முக்கிய பொறுப்பில் சுற்றுச்சூழல் துறையில் அனுபவம் இல்லாத ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியை நியமிப்பது நியாயமான நடவடிக்கையாக இருக்காது என்று பூவுலகின் நண்பர்கள் குற்றம்சாட்டியுள்ளது.
மேலும், உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களின் முக்கியப் பொறுப்புகளில் சுற்றுச்சூழல் பொறியாளர்கள், விஞ்ஞானிகள் போன்ற தொழில்நுட்ப வல்லுநர்களையே நியமிக்க வேண்டும் என்று விதி உள்ளது.
அதனை மீறி நிர்வாக அதிகாரியை நியமிப்பது சுற்றுச்சூழல் பாதுகாப்பை பலவீனப்படுத்தும் செயல் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
எனவே, தமிழக அரசு இந்த நியமனத்தை உடனடியாக ரத்து செய்துவிட்டு, தகுதி வாய்ந்த சுற்றுச்சூழல் துறை சார்ந்த தொழில்நுட்ப அதிகாரி ஒருவரை உறுப்பினர் செயலராக நியமிக்க வேண்டும் என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b