Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 ஜூலை (ஹி.ச.)
தமிழ்நாட்டில் உணவகங்களுடன் இணைந்த ரெஸ்டோ பார்களுக்கு
(Resto Bar) உரிமம் வழங்க தமிழக அரசு பரிசீலித்து வருவதாக வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிப்பதாக பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டம் குறித்து அரசு உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தற்போது தமிழ்நாட்டில் அரசு மதுக்கடைகளுடன் இணைந்த FL1 குடிப்பகங்கள், மனமகிழ் மன்றங்களின் FL2 குடிப்பகங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் உள்ள FL3 குடிப்பகங்கள் செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இவற்றில் விதிமீறல்கள் மற்றும் சட்டவிரோத மது விற்பனை நடைபெறுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், மேலும் FL3A உரிமத்தின் கீழ் ரெஸ்டோ பார்களை அனுமதிப்பது பிற்போக்குத்தனமான நடவடிக்கை என்று விமர்சித்துள்ளார்.
அரசு மதுக்கடைகளில் உள்ள சுகாதார குறைபாடுகள் அல்லது மனமகிழ் மன்றங்களில் உள்ள விதிமீறல்களை காரணமாகக் கூறி ரெஸ்டோ பார்களை அறிமுகப்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், சட்டவிரோதமாக இயங்கும் குடிப்பகங்களை மூடுவதற்குப் பதிலாக புதிய வகை மதுக்கூடங்களைத் தொடங்குவது தவறான முன்னுதாரணமாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், உணவகங்களுடன் இணைந்த ரெஸ்டோ பார்கள் சமூகத்தில் இயல்பான இடங்களாக கருதப்படுவதால், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்களிடையே மதுப் பழக்கத்தை அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
அரசின் உண்மையான நோக்கம் கூடுதல் வருவாய் ஈட்டுவதாகத் தெரிகிறது என்றும், மக்கள் நல அரசின் கொள்கை மதுவணிகத்தை விரிவுபடுத்துவது அல்ல, மதுவிலக்கை நோக்கிச் செல்ல வேண்டியது தான் என்றும் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
ரெஸ்டோ பார்கள் திறக்கப்பட்டால் மதுப்பழக்கம் அதிகரித்து, சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனவே, உணவகங்களுடன் இணைந்த ரெஸ்டோ பார் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும். இல்லையெனில், அதற்கு எதிராக சட்டரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பாட்டாளி மக்கள் கட்சி போராட்டங்களை முன்னெடுக்கும் என அன்புமணி இராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P