பழனி கோயிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி நில மோசடி - அறநிலையத்துறை அதிகாரிகளிடம் சிபிசிஐடி தீவிர விசாரணை
திண்டுக்கல், 17 ஜூலை (ஹி.ச) திண்டுக்கல் மாவட்டம் பழனி மலையடிவாரம் சன்னதி வீதியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான 1.40 ஏக்கர் நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.100 கோடி ஆகும். இந்த இடம் பக்தர்களின் இலவச வாகன நிறு
Rs. 100-crore land scam involving Palani temple


திண்டுக்கல், 17 ஜூலை (ஹி.ச)

திண்டுக்கல் மாவட்டம் பழனி மலையடிவாரம் சன்னதி வீதியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான 1.40 ஏக்கர் நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.100 கோடி ஆகும்.

இந்த இடம் பக்தர்களின் இலவச வாகன நிறுத்தமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது.

நீதிமன்ற உத்தரவுகளையும், அறநிலையத்துறையின் எதிர்ப்புகளையும் மீறி, போலி ஆவணங்கள் மூலம் இந்த நிலத்தை வெறும் ரூ.2 கோடிக்கு தனிநபர்கள் பெயரில் கடந்த ஜூலை 6-ம் தேதி சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்துள்ளனர்.

விதிமுறைகளை மீறி ஒரே நாளில் அவசர அவசரமாகப் பத்திரப்பதிவு செய்த சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மற்றும் மாவட்ட பதிவாளர் சசிகலா ஆகியோர் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

போலி டிரஸ்ட் பிரமுகர் முருகதாஸ் சாமிகள், நிலத்தை வாங்கிய பழனி சேதுபதி மற்றும் வெள்ளத்துரை ஆகிய 3 பேர் தற்போது தலைமறைவாக உள்ளனர்.

கூட்டுச் சதி, மோசடி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சிபிசிஐடி தனிப்படையினர் இவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

வழக்கின் தீவிரத்தன்மை மற்றும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து சம்பந்தப்பட்டிருப்பதால், தமிழக டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இந்த நில மோசடி தொடர்பாக வழக்கு தொடர்ந்த முருகானந்தம் உள்பட அறநிலையத்துறையைச் சேர்ந்த அதிகாரிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி எஸ்.பி. சஜிதா, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நேரடியாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக திண்டுக்கல்லில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் அறநிலையத்துறையைச் சேர்ந்த 5 அதிகாரிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது.

பழனி கோயிலுக்கு சொந்தமான விலைமதிப்பு மிக்க நிலம் எவ்வாறு முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது, இதன் பின்னணியில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது, அதிகாரிகளின் பங்கு என்ன என்பது குறித்து அதிகாரிகளிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, பழனி கோயில் நிர்வாகம் தொடர்ந்த வழக்கை விசாரித்த மதுரை உயர் நீதிமன்ற கிளை, இந்த நிலத்தை தனியாருக்குப் பத்திரப்பதிவு செய்தது முற்றிலும் செல்லாது என அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது

Hindusthan Samachar / vidya.b