ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் புதிய சிகிச்சை மையம் - அமைச்சர் அருண் ராஜ் தொடங்கி வைத்தார்
சென்னை , 17 ஜூலை (ஹி.ச.) சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் ரூ.2 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள அதிஅழுத்த பிராணவாயு (ஹைப்பர்பாரிக் ஆக்சிஜன்) சிகிச்சை மையத்தை மருத்துவம், மரு
A


சென்னை , 17 ஜூலை (ஹி.ச.)

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் ரூ.2 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள அதிஅழுத்த பிராணவாயு (ஹைப்பர்பாரிக் ஆக்சிஜன்) சிகிச்சை மையத்தை மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கோ.க. அருண் ராஜ் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார்.

நீண்டகால புண்கள், சிரை சார்ந்த புண்கள், நீரிழிவு பாத புண்கள் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு அதிஅழுத்த பிராணவாயு சிகிச்சை மிகவும் அவசியமானதாகும். சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஒரே இடத்தில் இந்த உயர்தர சிகிச்சையை கட்டணமின்றி பெறும் வகையில் இந்த மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் தற்போது 1,978-க்கும் மேற்பட்ட நோயாளிகள் நீண்டகால புண்கள் மற்றும் நீரிழிவு பாத புண்களுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை அதிஅழுத்த பிராணவாயு சிகிச்சை வசதி இல்லாததால், நோயாளிகள் மேல்சிகிச்சைக்காக பிற மேம்பட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டு வந்தனர்.

இதனால் சிகிச்சை தாமதம், நீண்ட தூர பயணம் மற்றும் கூடுதல் பொருளாதாரச் சுமை ஏற்பட்டு வந்தது.

மேலும், தனியார் மருத்துவமனைகளில் இந்த சிகிச்சைக்கு குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் வரை செலவாகும் நிலை இருந்தது.

தற்போது இந்த சிகிச்சைப் பிரிவு அரசு மருத்துவமனையிலேயே தொடங்கப்பட்டுள்ளதால், சிகிச்சை தேவைப்படும் பொதுமக்கள் எந்தவித கட்டணமும் செலுத்தாமல் இலவசமாக சிகிச்சை பெற்று பயன்பெற முடியும்.

சென்னை ரோட்டரி சங்கத்தின் சார்பில், நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு (CSR) நிதியின் கீழ் ரூ.2 கோடி மதிப்பில் இந்த மையத்திற்குத் தேவையான அனைத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மற்றும் நவீன மருத்துவ உபகரணங்கள் நிறுவப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் ஆர். சுகந்தி ராஜகுமாரி, அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை இயக்குநர் ஆர். மணி, நிலைய மருத்துவ அலுவலர் தளவாய் சுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA