Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 17 ஜூலை (ஹி.ச)
தென்காசி மாவட்டத்தின் அடையாளமாகவும், தமிழகத்தின் முக்கிய சுற்றுலா திருவிழாக்களில் ஒன்றாகவும் விளங்கும் குற்றாலம் சாரல் திருவிழா, வரும் ஜூலை 31-ஆம் தேதி கோலாகலமாக தொடங்க உள்ளது.
தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு குற்றால அருவிகளில் நீர்வரத்து பெருக்கெடுத்து சாரல் வீசும் இந்த இனிய பருவத்தை சுற்றுலாப் பயணிகளுடன் கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் தமிழக அரசு மற்றும் தென்காசி மாவட்ட நிர்வாகம் இணைந்து இந்த விழாவை நடத்தி வருகிறது.
இந்த ஆண்டு சாரல் திருவிழாவின் தொடக்க விழா குற்றாலம் கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் இந்த தொடக்க விழாவில், மங்கல இசை மற்றும் பரதநாட்டிய நிகழ்ச்சிகளுடன் விழா தொடங்கி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விழாவை முன்னிட்டு பல நாட்களுக்கு தொடர்ச்சியாக பல்வேறு கலை, கலாச்சார மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ஐந்தருவி சாலையில் உள்ள சுற்றுச்சூழல் பூங்காவில் தோட்டக்கலைத் துறை சார்பில் பிரம்மாண்ட மலர் கண்காட்சி, பழங்கள் மற்றும் காய்கறிகள் கண்காட்சி நடைபெற உள்ளது.
மேலும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கான கோலப்போட்டி, ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி, யோகா போட்டி, கால்நடைத்துறை சார்பில் நாய்கள் கண்காட்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்வுகள் பொதுமக்களை மகிழ்விக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளன.
சாரல் திருவிழாவை காண வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்தில் குவிந்து வரும் நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b