Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 ஜூலை (ஹி.ச.)
தென்காசி மாவட்டம், கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள மலையடிப்பட்டி தொல்லியல் தளத்தில் கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வரும் அகழாய்வில், 100-க்கும் மேற்பட்ட அரிய தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
அகழாய்வில் நுண்கற்கால கற்கருவிகள், சங்கு வளையல்கள், சுடுமண்ணால் செய்யப்பட்ட தக்களிகள், வட்டச்சில்லுகள், சுடுமண் மணிகள், சூதுபவள மணிகள், ஆடி மணிகள், தங்க மணி, செவ்வக பகடைக்காய், இரும்புப் பொருட்கள் மற்றும் செப்பு நாணயங்கள் உள்ளிட்ட பல்வேறு தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மேலும், சங்க காலத்தைச் சேர்ந்த சதுர வடிவ செங்கல் கட்டுமானம், முழுமையான பானைகள், மூடியுடன் கூடிய கருப்பு வண்ணம் தீட்டப்பட்ட பானைகள், துளையிடப்பட்ட கிண்ணங்கள் ஆகியவையும் அகழாய்வில் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
இந்தக் கண்டுபிடிப்புகள், சங்க காலத்தில் இரும்புக் கருவிகள் தயாரிப்பு, சங்கு வளையல் உற்பத்தி, ஆடி மணிகள் தயாரிப்பு மற்றும் நெசவுத் தொழில் சிறப்பாக நடைபெற்றதற்கான ஆதாரங்களை வெளிப்படுத்துவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தொல்லியல் ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு, அறிவியல் பூர்வமான ஆய்வு முடிவுகள் வெளியானால், தமிழர்களின் தொன்மை மற்றும் நாகரிகப் பெருமை உலகளவில் மேலும் வலியுறுத்தப்படும் என்ற நம்பிக்கையையும் அமைச்சர் ராஜ்மோகன் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P