உடுமலை நகராட்சியில் 30 பணிகளுக்கான டெண்டர்கள் ரத்து – முறைகேடு புகாரால் துறைரீதியான விசாரணை
திருப்பூர், 17 ஜூலை (ஹி.ச.) திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சியில் பாலம், பேவர் பிளாக் சாலை, மழைநீர் வடிகால் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளுக்காக அறிவிக்கப்பட்டிருந்த 30 டெண்டர்கள் முறைகேடு புகாரின் பேரில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளத
தலைமைச் செயலகம்


திருப்பூர், 17 ஜூலை (ஹி.ச.)

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சியில் பாலம், பேவர் பிளாக் சாலை, மழைநீர் வடிகால் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளுக்காக அறிவிக்கப்பட்டிருந்த 30 டெண்டர்கள் முறைகேடு புகாரின் பேரில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் பணிகளுக்காக மொத்தம் ரூ.86.72 லட்சம் மதிப்பில் டெண்டர்கள் கோரப்பட்டு, கடந்த ஜூலை 14-ஆம் தேதி டெண்டர்கள் பெறப்பட்டதாக கூறப்படுகிறது.

நகராட்சி டெண்டர் நடைமுறையின்படி, டெண்டர் அறிவிப்பு குறைந்தபட்சம் 15 நாட்களுக்கு முன்பாக இணையதளம் மற்றும் நாளிதழ்களில் வெளியிடப்பட வேண்டும். ஆனால், இந்த நடைமுறை பின்பற்றப்படாமல், வெறும் 4 நாட்களுக்கு முன்புதான் டெண்டர் அறிவிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதன் மூலம் குறிப்பிட்ட சிலருக்கு சாதகமாக டெண்டர் வழங்க முயற்சி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த முறைகேடு தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், 30 டெண்டர்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அப்போதைய நகராட்சி ஆணையாளர் விநாயகம் மற்றும் தற்போதைய நகராட்சி பொறியாளர் (ME) சண்முகவடிவு ஆகியோர் மீது துறைரீதியான விசாரணை மற்றும் நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உடுமலை நகராட்சியில் 30 வளர்ச்சிப் பணிகளுக்கான டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ள சம்பவம், பொதுமக்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam